ஆதிசங்கரர் ஏழாம் நூற்றாண்டு இன்றைய கேரளத்திலுள்ள "காலடி" எனப்படும் ஊரில் ஆர்யாம்பாள்/சிவகுரு தம்பதியினருக்கு மகனாய் தோன்றிய மெய்ஞான வல்லுநர். இவர் எட்டு வயதில் சந்நியாசம் பெற்று துறவறம் சென்றார். இவரது காலத்தில் இந்து மதம் “துவைதம்” தத்துவத்தை நம்பியும், பௌத்த மற்றும் சமண மதத்திற்கு மாற்றபட்டும் வந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்து சமயத்தின் மூன்று அடிப்படை நூல்கள் என்று அறிப்படும் பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதைக்கு விளக்கவுரை அளித்து அவை போதிக்கும் அத்வைத வேதாந்தம் அதாவது இரண்டற்றது என்கிற அத்வைத தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர். மேலும் விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற சமய நூல்களுக்கும் இவர் விளக்கவுரை நிருவியுள்ளதாக பொதுக் கருத்து உள்ளது. 


இந்து மதமானது சைவம், வைணம், சாக்தம், காணாபத்யம், கௌமாரம், சௌரம் என பிரிந்து இருந்தது. இதை அனைத்தையும் ஒன்று சேர்த்து சநாதன தர்மத்தை நிலைநாட்ட பாரதம் முழுதும் திக்விஜயம் செய்தார். கபாலிக சமயத்தை தடுத்து ஆட்கொண்டார். கோவில்களில் உயிர்பலியை தடுத்தார். ஜீவகாருண்யத்தை எடுத்துரைத்தார்.


இவர் சிவானந்த லஹரி, கோவிந்தாஷ்டகம், பஜ கோவிந்தம், சித்தாந்த சாங்கியம், விவேகசூடாமணி, ஆத்மபோதம், உபதேச சாஹஸ்ரி, கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரஹ்மண்ய புஜங்கம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.


ஆதிசங்கரர் ஜெயந்தியானது வைசாக மாதம் சுக்ல பட்ச பஞ்சமியன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி செவ்வாய் கிழமை வளர்பிறை பஞ்சமி திதியான இன்று “சங்கர ஜெயந்தி” விழா கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அத்வைத கொள்கைகளை சிறந்த குரு மூலம் கற்று தெளிவு பெற்று மாயையை துறந்து பரமாத்மாவுடன் இணைவோம்.