இனி மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் ₹ 10,000 அபராதம்...
மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவோருக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் சட்டமசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்!!
மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவோருக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் சட்டமசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்!!
17-வது மக்களவையின் முதல் நாள் கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் பதவி பிரமாணம் ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில், தொடர்ந்து நடைபெற்று வரம் நாடாளுமன்ற கூட்டத்தில் பல்வேறு மசோதாக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், கார், மோட்டார் சைக்கிள் மற்றும் கனகர வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்டதிருத்தத்தை மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, மோட்டார் வாகனச் சட்டத்தில் சாலைப் பாதுகாப்பு ஆர்வலர்களின் ஆலோசனைகளோடு அதே மசோதாவானது சில திருத்தங்களுடன் மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது புதிய மசோதா என்பதால் மீண்டும் அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே, மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை விதிகளை மீறுவோருக்கான அபராதத்தை அதிகரித்து வசூலிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.
மோட்டார் வாகனச் சட்டத்தின் புதிய விதியின் படி, சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால், இதற்கு முன்பு 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த மசோதா நிறைவேறினால், அபராதமானது ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படும். தலைக்கவசம் அணியாவிட்டால் முன்பு 100 ரூபாயாக இருந்த அபராதம், ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படுவதுடன், 3 மாதத்திற்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். ஆம்புலன்ஸ் போன்ற அவசர ஊர்திகளுக்கு வழிவிடவில்லை என்றால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.
ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவில்லை என்றால், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்த விதிமீறலுக்கு தற்போது 500 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டதை மீறி வாகனம் ஓட்டுவோருக்கான அபராதத் தொகை 500-ரில் இருந்து பத்தாயிரம் ரூபாய் அதிகரித்து வசூலிக்கப்படும். மது குடித்து வாகனம் ஓட்டினால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில், அந்தத் தொகை பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். வேகமாக வாகனத்தை ஓட்டுதல், பந்தயத்தில் ஈடுபடுதல் போன்ற விதிமீறல்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க இந்த மசோதா வழிவகை செய்யும்.
அதிக அளவும் பாரம் ஏற்றினால் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, டன்னுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் வசூலிக்கப்படும். சிறுவர்கள் வாகனம் ஓட்டி, விதிமீறலில் ஈடுபட்டு விபத்து ஏற்பட்டால், பெற்றோர் அல்லது வாகன உரிமையாளர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 3 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும். வாகனப் பதிவு ரத்து செய்யப்படும். இவை மட்டுமல்லாமல், விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் செல்லும் நபர்களால் பாதிக்கப்படுவோருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். மோசமான சாலைகளால் விபத்து ஏற்பட்டால், ஒப்பந்ததாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.
உரிம நிபந்தனைகளை மீறும் கால் டாக்சி நிறுவனங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும் போன்ற திருத்தங்கள் அந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.