குருபகவான் முழுமையான சுபக்கிரகம் என்று அழைக்கப்படுவர். அனைத்து விஷயத்திற்கும் குருபகவானுடைய அனுக்கிரகம் என்பது வாழ்க்கையில் மிகவும் முக்கிமானதொன்றாகும்..!

ஜாதக ரீதியாக குரு தோஷம் உடையவர்கள், குருப்பெயர்ச்சியால் நன்மை அடைய விரும்புவோர், குருவால் பாதகம் எதுவும் ஏற்படமால் இருக்க விரும்புவோர் தகுந்த குரு ஸ்தலம் சென்று பூஜைகள் செய்து நன்மை அடையலாம். குருவுக்கு கோவில் என்றால் கும்பகோணம் அருகே ஆலங்குடியில் இருக்கும் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் மட்டுமல்ல, எண்ணற்ற பழமையான குரு ஸ்தலங்கள் உள்ளன. தங்கள் அருகில் இருக்கும் இத்தகைய ஊர்களில் குருப்பெயர்ச்சியன்று குருவை வழிபட்டு நன்மை அடையலாம். அப்படிப்பட்ட சில அரிய கோவில்களை இங்கு பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

* திருச்செந்தூர் முருகன் கோவில் அறுபடை வீடுகளில் ஒன்றாகவும் சிறந்த குரு ஸ்தலமாகவும் விளங்குகிறது. குருப்பெயர்ச்சியன்று இங்கு சென்று கடலிலும், நாழிக்கிணற்றிலும் நீராடி முருகனை வழிபட நன்மை பிறக்கும்.


* திருச்செந்தூர் அருகே வைணவஸ்தலங்களில் நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரியும் சிறந்த குருஸ்தலமாகும். திருச்செந்தூர் சென்றுவிட்டு இந்த கோவிலிலும் வணங்கி வரலாம்.


* மதுரை சோழவந்தான் அருகே உள்ள குருவித்துரை சித்திர வல்லப பெருமாள் கோவில் சிறந்த குரு ஸ்தலமாகும். இங்கு குருவுக்கு தனி சன்னதி உள்ளது.


* தஞ்சாவூர் அருகே உள்ள திட்டை கோவிலில் குருபகவான் காட்சி தருகிறார். சிறந்ததொரு குரு பரிகார ஸ்தலம் இதுவாகும்.


ALSO READ | இறைவழிபாட்டில் பசுவுக்கும், பாம்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?


* தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பொது ஆவுடையார் கோவில் என்ற கோவில் உள்ளது. சிவபெருமான் இரண்டு முனிவர்களுக்கு குருவடிவில் காட்சி தந்த இடம் இது. இந்த கோவில் திங்கட்கிழமை இரவு 12 மணிக்கு மட்டும்தான் திறக்கப்படும் அப்போதே பூஜைகள் முடிந்து இரண்டு மணி நேரத்திற்குள் நடை சாற்றப்படும். மீண்டும் அடுத்த திங்கட்கிழமைதான் திறக்கப்படும் குருப்பெயர்ச்சி முடிந்த பிறகு ஏதாவது ஒரு திங்கட்கிழமை இங்கு சென்று வணங்கலாம்.


* சென்னையில் ஆவடி செல்லும் வழியில் பாடி என்ற இடத்தில் திருவல்லீஸ்வரர் கோவில் உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த குரு ஸ்தலம் இதுவாகும். குரு தோஷம் மட்டுமின்றி சனி தோஷமும் நீங்கும் ஸ்தலமாகும். இங்கு குருவுக்கு மிகப்பெரிய தனி சன்னதி உள்ளது குறிப்பிடத்தக்கது.


* கும்பகோணத்தில் இருக்கும், அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை முருகன் கோவிலும் குரு ஸ்தலமாகும். தந்தைக்கு குரு வடிவில் முருகன் உபதேசம் செய்த இடமாகும் இங்கு சென்று வழிபடலாம்.


* சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது பட்டமங்கலம் அஷ்டமாசித்தி குரு கோவில். இங்கு சென்று வழிபட்டாலும் மிக சிறப்பான பலன்களை பெறலாம்.


* அரக்கோணம் அருகே உள்ளது கோவிந்தவாடி குரு கோவில். குரு கோவிந்தவாடி என்றே இவ்வூர் அழைக்கப்படுகிறது. இங்கு ஐந்தடி உயரத்துக்கு அழகான வேலைப்பாடு அமைந்த பீடத்தில் பத்மாசனத்தில் குரு பகவான் வீற்றிருக்கிறார். ஆதி சங்கரர் வழிபட்ட ஸ்தலம் இது.


* முடிந்தவர்கள் வட இந்தியாவில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலுக்கும், ஆந்திர மாநிலத்தில் மந்த்ராலயத்தின் ராகவேந்திரரையும் குருப்பெயர்ச்சியன்று தரிசிக்கலாம்.


குரு அம்சத்தில் இருக்கும் இவர்களை குருப்பெயர்ச்சியன்று வணங்குவது சிறப்பு. முடியாதவர்கள் உங்கள் ஊர் அருகில் ஜீவசமாதிகளில் வீற்றிருக்கும் மகான்களை குருப்பெயர்ச்சியன்று வழிபடலாம். அவர்கள் குருவடிவில் உங்களுக்கு தகுந்த வழியை காட்டுவார்கள்.