தனது மகனுக்கான அன்பு, தைரியம் மற்றும் உறுதியுடன் தெலுங்கானாவை சேர்ந்த ஒரு தாய், 3 நாட்களில் சுமார் 1,400 கி.மீ தூரத்தை ஸ்கூட்டரில் கடந்துள்ளார். கொரோனாவின் முழு அடைப்பால் அண்டை மாநிலமான ஆந்திராவின் நெல்லூரில் சிக்கிக்கொண்டபின் தனது மகனை வீட்டிற்கு அழைத்து வர அவர் மேற்கொண்ட இந்த முயற்சி பலரை ஈர்த்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரஷியா பேகம் (48) என அடையாளம் காணப்பட்ட அவர், திங்கள்கிழமை காலை உள்ளூர் காவல்துறை அனுமதியுடன் நெல்லூருக்கு தனியாகச் சென்று புதன்கிழமை மாலை தனது இளைய மகனுடன் வீடு திரும்பியுள்ளார்.


இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., "சிறிய இரு சக்கர வாகனத்தில் இது ஒரு கடினமான பயணம். ஆனால் என் மகனை மீண்டும் அழைத்து வருவதற்கான உறுதி, எனது எல்லா அச்சங்களையும் முறியடித்தது. பயணத்திற்கு சக்தி அளிக்க குறைந்த அளவு ரொட்டிகளை மட்டும் எடுத்துக்கொண்டேன், இரவு நேரத்தில் யாரும் இல்லாத ரோட்டில் எனது பயணம் சிறிது அச்சத்தை தூண்டியது. ஆனாலும் அதற்காக நான் அஞ்சவில்லை" என குறிப்பிட்டுள்ளார்.



ரஷியா பேகம், ஹைதராபாத்திலிருந்து 200 கி.மீ தூரத்தில் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள போதன் நகரத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியராக உள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரை இழந்த ரசியா, ஒரு பொறியியல் பட்டதாரி மற்றும் 19 வயது MBBS மாணவர் என தனது இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார்.


இந்நிலையில் ரஷியா பேகத்தின் இரண்டாம் மகன் தனது நண்பரை சந்திக்க கடந்த மார்ச் 12 அன்று நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ரஹ்மதாபாத்திற்கு சென்றுள்ளார், பின்னர் கொரோனா அடைப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கேயே தங்க வேண்டிய கட்டாயத்தில் சிக்கினார்.


எனினும் தனது மகனை பிரிய விரும்பாத ரஷியா பேகம், அவரை திரும்ப அழைத்து வர முடிவு செய்தார். அதற்காக அவர் தனது மூத்த மகனை வெளியில் அனுப்பவில்லை, மாறாக தானே களத்தில் இறங்கினார். 


ஆரம்பத்தில் ஒரு காரை எடுத்துக்கொள்வதைக் கருத்தில் கொண்ட பிறகு, அவர் அந்த யோசனையை நிராகரித்து தனது இரு சக்கர வாகனத்தைத் தேர்ந்தெடுத்தார்.


ஏப்ரல் 6-ஆம் தேதி காலை, அவர் பயணத்தைத் தொடங்கி மறுநாள் பிற்பகல் நெல்லூரை அடைந்தார். அவர் தனது மகனுடன் அதே நாளில் சொந்த ஊருக்குப் புறப்பட்டு புதன்கிழமை மாலை போத்தானை அடைந்தார்.


சொந்த ஊருக்கு திரும்பிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரசியா, "நான் காவல் துறைக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர்களின் ஒத்துழைப்புக்கு நான் அவர்களுக்கு மிகவும் நன்றி கூறுகிறேன். ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் நான் பாதுகாப்பாக வழியில் ஓய்வெடுக்க முடியும் என்பதை அவர்கள் உறுதிசெய்தார்கள், பின்னர் எனது பயனத்தை மேலும் தொடரவும் அவர்கள் எனக்கு அனுமதி அளித்தனர்" என தெரிவித்துள்ளார்.