இன்று தந்தை பெரியார் நினைவு தினம்: அவரை அறிந்து கொள்ளுவோம்
இன்று இன்று பெரியாரின் 46-வது நினைவு தினம். அவரைப்பற்றி சில விவரங்களை தெரிந்துக்கொள்ளுவோம்.
பெரியார் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள் செப்டம்பர் 17, 1879-ம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தார்.
இவர் சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர்.
1. தந்தை பெரியார் 1879-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி வெங்கட்ட நாயக்கருக்கும், சின்னதாயம்மைக்கும் மகனாக தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர், ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர். இவருக்கு கிருஷ்ணசாமி என்ற சகோதரனும், கண்ணம்மா மற்றும் பொன்னுதாயி என்ற இரண்டு சகோதரிகளும் இருந்தனர். இவருடைய குடும்பம் மிக வசதியான வணிகப் பின்னணியைக் கொண்டது.
2. தந்தை பெரியார் தனது படிப்பை ஐந்தாம் வகுப்போடு நிறுத்திக் கொண்டார். 19 வது வயதில் திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு பெண்குழந்தை பிறந்தது ஆனால், அந்த குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்துவிட்டது.
3. 1902-ம் ஆண்டுகளில் கலப்புத் திருமணங்களை நடத்தி வைத்தார். அனைத்து சாதியினருடனும் சேர்ந்து சமமாக உணவு சாப்பிட்டார். இதனால் அவருக்கும், அவர் தந்தைக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு, துறவு பூண்டு காசிக்கு சென்றார் தந்தை பெரியார். காசியில் அவருக்கு நடந்த நிகழ்வுகளால் இறைமறுப்பாளராக தன்னை மாற்றிக் கொண்டார்.
4. ஆரம்ப காலத்தில் காந்தி கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு 1919-ம் ஆண்டு தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். காந்தி தலைமையில் காங்கிரஸ் நடத்திய பல போரட்டங்களில் கலந்துக்கொண்டு சிறை சென்றார். 1922-ம் ஆண்டு சென்னை மாகாண காங்கிரஸ் கட்சி தலைவராக தந்தை பெரியார் தேர்தெடுக்கப்பட்டார்.
5. அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் கட்சியினர் ஏற்க மறுத்ததால், தந்தை பெரியார் 1925-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை விட்டு விலகினார்.
6. கேரளாவில் வைக்கம் என்னும் ஊரில் கோயிலுக்குள் நுழையவும், கோயில் வீதியில் நடக்கவும் தலித் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடையை எதிர்த்து நடந்த போரட்டத்தில் தந்தை பெரியார் கலந்து கொண்டு சிறை சென்றார். இந்த போராட்டதிற்கு பிறகு பெரியார் ‘வைக்கம் வீரர்’ என அழைக்கப்பட்டார்.
7.1925-ம் ஆண்டு சமுகத்தில் இருக்கும் மூடபழக்க வழக்கங்களை அகற்ற வேண்டும் என ‘சுயமரியாதை இயக்கம்’ தொடங்கினார். அதே அண்டு “குடியரசு நாளிதழை” தொடங்கினார் தந்தை பெரியார். இந்த நாளிதழ் மூலம் பெரியார் தன்னுடைய கொள்கைகளையும் சிந்தனைகளையும் பரப்பினார். இதற்க்கு மக்களின் பெரும் ஆதரவும் கிடைத்தது. மாநாடு, கூட்டங்கள் நடத்தி மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
8. 1937-ம் ஆண்டு சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரியார் மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சரானார். அவரின் ஆட்சி காலத்தில் இந்தி கட்டாய மொழியாகப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டமாக வெடித்தது. 1938-ல் நீதிக்கட்சியின் சார்பாக பெரியார் இந்தி மொழிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
9. 1939-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் சிறை வைக்கப்பட்டிருந்த இராமசாமி விடுதலையானதும், நீதிக்கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றார். பின்னர் ‘நீதிக்கட்சி’ என்ற பெயரை 1944-ம் ஆண்டு ‘திராவிட கழகம்’ என பெயர் மாற்றினார் பெரியார். திராவிட கழகத்தின் கொள்கைகள் வெகு விரைவில் மக்களிடத்தில் சேர்ந்தது.
10. 1949-ம் ஆண்டு முதல் திராவிடர் கழகம் தங்களை மூடநம்பிக்கை எதிர்ப்பாளர்களாகவும், சமூக சீர்திருத்தவாதிகளாகவும் சமூகத்தில் அடையாளப்படுத்தும் வகையில் செயல்பட்டனர். திராவிடர் கழகம் தலித்துக்களுக்கு எதிராகப் பயன்படுத்தபடும் தீண்டாமையை மிகத்தீவிரமாக எதிர்ப்பதிலும், ஒழிப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டது. பெண்கள் உரிமை, பெண் கல்வி, பெண்களின் விருப்பத்திருமணம், கைம்பெண் திருமணம், ஆதரவற்றோர் மற்றும் கருணை இல்லங்கள் போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.
11. 1949-ம் ஆண்டு தனது வழிகாட்டியான தந்தை பெரியாரிடமிருந்து அண்ணாதுரை விலகி, திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
12. இந்து மத கடவுள்கள் மூடநம்பிக்கைகளை மக்களிடையே வளர்ப்பதாக கூறி, 1952-ம் ஆண்டு பிள்ளையார் உருவ பொம்மைகளை உடைத்தது மட்டுமல்லாமல், இந்துக்களின் கடவுளாக கருதப்பட்ட ராமரின் உருவப்படம் எரிப்புப் போராட்டத்தையும் நடத்தினார்.
13. 1962-ம் ஆண்டு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளராக கி. வீரமணியை நியமித்தார். முழு நேரமும் கட்சிப் பொறுப்பைக் கவனிக்கும் விதத்தில் அவருக்கு பொறுப்பை தந்தார்.
14. அப்போதைய இந்திய கல்வி அமைச்சர் திரிகுனா சென் அவர்களால், தந்தை பெரியாருக்கு ‘யுனஸ்கோ விருது’ 1973-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி வழங்கப்பட்டது.
15. 1973-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற கூட்டத்தில், சாதிமுறையையும், இழிவுநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடவேண்டும்’ என்று முழக்கமிட்டு தன்னுடைய கடைசி உரையை முடித்துக்கொண்டார். இது தான் அவரின் கடைசிக் கூட்டம் ஆகும்.
16. உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், அழியாத வரலாற்றின் அறிஞருமான தந்தை பெரியார், டிசம்பர் 24-ம் தேதி 1973-ம் ஆண்டு, தனது 94_வது வயதில் காலமானார்.
17. தமிழ்நாடு அரசு தந்தை பெரியாரின் நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த ஈரோடு இல்லத்தை பெரியார் - அண்ணா நினைவு இல்லமாக்கியுள்ளது.
18. ஈ.வெ.இராமசாமி ‘பகுத்தறிவு பகலவன், ‘வைக்கம் வீரர்’ மற்றும் ‘தந்தை பெரியார்’ என பல்வேறு பெயர்களில் அழைக்கபடுகிறார்.
19. வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார்.
20. இன்றும் திராவிடர்கள் தலைநிமிர்ந்து சமத்துவத்தோடும், பகுத்தறிவோடும் வாழ்கிறார்கள் என்றால், அதில் தந்தை பெரியாரின் பணி மிகப்பெரியது. மாபெரும் சிந்தனையாளர் ‘பெரியார்’ என்றால் அது மிகையாகாது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.