தீபாவளி பண்டிகை எதனால் கொண்டாடப்படுகிறது!
தீபாவளி கொண்டாட்டம் என்பது இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. அனைத்து மதத்தினரையும் ஈர்க்கும் ஒரே பண்டிகை தீபாவளி.
தீபாவளி கொண்டாட்டம் என்பது இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. அனைத்து மதத்தினரையும் ஈர்க்கும் ஒரே பண்டிகை தீபாவளி.
தீபாவளி வந்தாலே பட்டாசு வெடித்து ஆனந்த குத்தாடும் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது. அந்த வகையில் தீபாவளி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது என்பதை பார்ப்போம்!
நரகாசுரன் என்ற அரக்கன் ஒருவன் இருந்தான். அவனுக்கு இந்த மூவுலகமும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தன் விருப்பத்திற்கு அனுபவிக்க வேண்டும் என்ற பேராசை இருந்தது. தேவர்கள் கூட தன் காலடியில் கிடக்க வேண்டும் என்ற நப்பாசை இருந்தது. இந்த ஆசைகளை நிறைவேற்ற பிரம்மனை நோக்கி கடும் தவம் இருந்தான் நரகாசுரன்.
இதனை பார்த்த பிரம்மன், தனக்காக தவம் இருந்த நரகாசுரனுக்கு அவன் கேட்கும் வரங்களை அள்ளி அள்ளி கொடுத்தார். ஒரு கெட்டவனுக்கு பதவி கிடைத்தால் எப்படியெல்லாம் பயன்படுத்துவானோ அப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டான் நரகாசுரன்.
எல்லோருக்கும் துன்பம் விளைவித்து வந்த நரகாசுரன், தேவர்களையும் முனிவர்களையும் அவன் கொடுமைப்படுத்தினான். அதுமட்டுன்றி தனக்கு வரம் கொடுத்த பிரம்மனை எதிர்த்தே போர் தொடுத்தான் நரகாசுரன்.
வரத்தை கொடுத்து விட்டு நரக வேதனைகளை அனுபவிக்க வேண்டி இருக்கிறதே என்று புலம்பினார் பிரம்மன். காக்கும் கடவுளான கிருஷ்ண பகவானிடம் தன் குறைகளை கூறி முறையிட்டார்.
இதனால் கிருஷ்ண பகவான் நரகாசுரனை அணுகி, தவம் செய்து பெற்ற வரத்தை தவறான வழியில் செயல்படுத்துவது நியாயம் அல்ல என்று முறையாக சொல்லி பார்த்தார். ஆனால் நரகாசுரன் கேட்பதாக இல்லை. தன் விருப்பம் போல் மக்களை கொடுமைப்படுத்தினான். இதனால் கோபம் அடைந்த கிருஷ்ண பகவான், நரகாசுரனை போருக்கு அழைத்து தம் சக்கராயுதத்தால் அவனின் உடலை இரண்டாக பிளந்தார்.
இறக்கும் நிலையில் இருந்த நரகாசுரன், கிருஷ்ணனின் காலை பிடித்து, பகவானே என்னுடைய சாவு கெட்டவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். நான் செய்த பாவங்களை மன்னித்து விடுங்கள் என்று கெஞ்சினான்.
இறக்கும் நிலையில் உள்ள எனக்கு ஒரு ஆசை. அதை இப்போது தெரிவிக்கிறேன் என்று சொன்ன நரகாசுரன், கொடியவனாக நான் இறக்கும் இந்நாளை மக்கள் அனைவரும் அல்லல் நீங்கிய நன்நாளாக மங்களகரமான நாளாக கொண்டாடி மகிழ வேண்டும் என்று வேண்டினான்.
கிருஷ்ண பகவானும் அவ்வாறே அவனுக்கு அருளினார். இதனால் தான் நரகாசுரன் இறந்த நாளைத்தான் இந்துக்கள் தீபாவளியாக கொண்டாடி வருகின்றனர் என்று ஜதீகம் கூறுகிறது.
இந்த நன்நாளில் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து பல வகை பண்டங்கள் செய்து பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறோம். தீபாவளி இங்கு மட்டும் கொண்டாடப்படுவதில்லை. உலகம் முழுவதும் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று பொருள் உண்டு. இந்தநாளில் தீபங்களை வரிசையாக வைத்து மகிழ்ந்து கொண்டாடுவார்கள்.
ராமபிரான் இலங்கை சென்று ராவணனோடு கடும் போர் புரிந்து, தனது இல்லாளான (மனைவி) சீதா பிராட்டியாரை மீட்டுக் கொண்டு அயோத்திக்கு திரும்பி வந்தார். தன் வனவாசம் முடிந்து நாட்டை ஆள வரும் வெற்றி வீரர் ராமரை வரவேற்க மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக தீபங்களை ஏற்றி கொண்டாடினார்கள். அதனால் தான் தீபாவளி அன்று திருவிளக்குகளை வரிசையாக ஏற்றி வைக்கும் வழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.