பிரா அணியாமல் இருப்பதை இயக்கமாக முன்னெடுக்கும் தென்கொரிய பெண்கள்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகத்தி தங்களுக்கான சில கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும் என்ற பலரும் பல இயக்கங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,  தென்கொரியாவில் பெண்கள் மேலாடைக்கு உள்ளே பிரா அணியாமல் இருப்பதையே ஒரு இயக்கமாக உருவாக்கிஅந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். #NoBra என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி இது சமூக ஊடகத்தில் பெண்கள் இயக்கமாக மாறி வருகிறது.


தென்கொரிய நடிகையும், பாடகியுமான சுல்லி என்பவர், லட்சக் கணக்கானோர் பின்தொடரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தாம் பிரா அணியாதிருக்கும் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்ததை அடுத்து இந்த முறை வைரலாக பரவி வருகிறது. தென்கொரியாவில் பிரா அணியாத இயக்கத்தின் ஓர் அடையாளமாக அவர் மாறியுள்ளார். பிரா அணிவதோ அல்லது அணியாமல் இருப்பதோ ''தனிப்பட்ட சுதந்திரம்'' என்ற செய்தியை வெளிப்படுத்துவதாக இந்த இயக்கம் அமைந்துள்ளது.


இந்த இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து நிறைய பதிவுகள் பதிவிடப்பட்டுள்ள போதிலும், அவர், ''தன் மீது கவனத்தை ஈர்க்க'' முயற்சிக்கிறார் என்றும், வேண்டுமென்றே மக்களின் உணர்வுகளைத் தூண்டும் செயலில் ஈடுபடுகிறார் என்றும் பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். 


இந்நிலையில், ''பிரா அணிவது உங்களுடைய விருப்பம் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் எப்போதும் இறுக்கமான ஆடைகளை அணிந்து மார்பகங்களை வெளிக்காட்டும் வகையில் அவர் புகைப்படங்கள் எடுத்து வருகிறார். அதுபோல அவர் செய்யத் தேவையில்லை,'' என்று ஒருவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
 
''பிரா அணியாததற்காக உங்களை நாங்கள் குற்றம் சொல்லவில்லை. உங்கள் மார்புக் காம்புகளை மறைக்க வேண்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம்,'' என்கிறது இன்னொரு பதிவு. 



அதுமட்டும் இன்றி, 'உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன். இதேபோல பிரா அணியாமல் சர்ச்சுக்கு நீங்கள் செல்ல முடியுமா? உங்கள் சகோதரியின் கணவரை அல்லது உங்கள் கணவருடைய பெற்றோரை இதுபோல சென்று சந்திக்க முடியுமா,'' போன்ற கேள்விகள் எழுவது மட்டுமல்லாது ''ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் இதை அசௌகரியமாக உணர்கிறார்கள்,'' என்றும் கருத்துகள் பதிவிடப் பட்டுள்ளன.


இந்நிலையில், சமீபத்தில் ஹிவாசா என்ற மற்றொரு பிரபலமான பாடகியும் #NoBra இயக்கத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருந்தார். இவரது புகைப்படங்களும் இணையதளத்தில் வைரலாக பரவியது. 


தென் கொரியாவில் பெண்கள் சுதந்திரத்தில் நாட்டம் காட்டுவது இது தனிப்பட்ட நிகழ்வு அல்ல. 2018ல் ''மார்பில் இறுக்கமான உடைகளில் இருந்து விடுதலை,'' என்ற இயக்கம் தீவிரமடைந்தது.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் சில பெண்கள் கூறுகையில்;  'பார்வையால் பாலியல் வல்லுறவு செய்தல்' என்ற போக்குதான் அவர்களுக்கு மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்கள் அளவுக்கு அதிகமாக உற்றுப் பார்ப்பது, அத்துமீறிய செயலாக உள்ளது என்று அவர்கள் கருதுகின்றனர்.


இதுகுறித்து, பத்திரிகையாளர் வனெஸ்ஸா அல்மெடா கூறுகையில்; 
''பெண்கள் எப்படி அடிமைத்தனத்தில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதன் அடையாளமாக பிரா இருக்கிறது,'' என்கிறார். ஆண்களும், பெண்களும் தங்கள் மார்புக் காம்புகளை வெளிக்காட்டும்போது சென்சார் செய்வதில் இரட்டை நிலைப்பாடு இருப்பதைக் குறிப்பிட்டு சமீபத்திய ஆண்டுகளில் பிரசாரங்கள் நடைபெறுகின்றன.



2014 டிசம்பரில் நெட்பிலிக்ஸ் நிறுவனம் Free the Nipple என்ற தலைப்பில் ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக பெண்களின் மார்பகங்களை மையமாகக் கொண்ட கிரிமினல் செயல்பாடுகள் மற்றும் சென்சார் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நியூயார் நகரில் இளம்பெண்கள் குழுவினர் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டினர். இதனால் ''Free the Nipple'' பிரசாரம் உலகளாவிய செயல்பாடாக உருவெடுத்தது. தென்கொரியாவில் சமீபத்தில் ஏற்பட்ட ''No Bra'' இயக்கம், பெண்களின் உடல்களை மையமாகக் கொண்டு உலகெங்கும் உள்ள கட்டுப்பாடுகள் மீது கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் அமைந்துள்ளது.
 
தென்கொரியாவில் இதில் பங்கேற்ற பெண்கள், கலாசார எதிர்பார்ப்புகள் காரணமாக இதற்கு தயக்கம் காட்டுவதாகக் கூறுகின்றனர். இருந்தாலும், ''தனிப்பட்ட சுதந்திரம்'' என்ற அளவில் இது அடிப்படை குறித்தது என்று பல பெண்கள் கூறியுள்ளனர். இந்த இயக்கம் தீவிரமடைந்து வரும் வேகத்தைப் பார்த்தால், பிரா அணியாமல் இருப்பது பிரச்சனையில்லை என்ற நிலை வரும் வரையில் இந்த ஹேஷ்டேக் வேகம் குறையாது என்று தெரிகிறது.