மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா  கடந்த ஏப். 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல் 27ஆம் தேதி திருக்கல்யாணமும், ஏப்ரல் 30ம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறவுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவ்விழாவில், சனிக்கிழமை காலை வில்லாபுரம் பாவக்காய் மண்டபத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை தங்கச்சப்பரத்தில் மாசி வீதிகளில் சுவாமி, அம்மன் எழுந்தருளினர். சிவனடியாருக்கு வேடர் உருவத்தில் வந்து சுந்தரேசுவரர் காட்சி தந்து அருள்பாலிக்கும் புராண நிகழ்வு சிவாச்சாரியார்களால் வாசிக்கப்பட்டது. 
 
இதையடுத்து, சித்திரை திருவிழாவின் நன்காம் நாளான இன்று திருஞானசம்பந்தர் சைவ சமயத்தை ஸ்தாபித்ததை நினைவூட்டும் வகையிலான பூஜைகள் நடைபெறுகின்றன. 


பின்னர், தங்கச்சப்பரத்தில் சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் தங்கச்சப்பரத்தில் எழுந்தருள்வர். மாசி வீதிகளில் வலம் வந்த பின்னர் காலை 10.30 மணிக்கு கோயிலுக்குள் உள்ள சிவகங்கை ராஜா மண்டகப்படியில் எழுந்தருள்வர்.


பட்டாபிஷேகம் நடைபெரும்....!


சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் புதன்கிழமை (ஏப். 25) ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. 


பட்டாபிஷேகத்தில் அம்மனிடமிருந்து செங்கோலைப் பெறும் கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன் அதை சகல மரியாதைகளுடன் சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரத்தை சுற்றிவந்து மீண்டும் அம்மனிடம் ஒப்படைப்பார். 


மாலையில் சுவாமி தங்க ரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர். 


இதை தொடர்ந்து, சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் வரும் 27ஆம்தேதி நடைபெறும்.


இத்திருக்கல்யாணம் முடிந்த உடன் மீனாட்சி, 28ஆம் தேதி, பிரியாவிடை சமேதராக சுந்தரேஸ்வரர் காட்சியளிப்பதை லட்சக்கணக்கான பக்தர்கள் கண் குளிர கண்டு ரசிப்பார்கள்.


இதையடுத்து, வரும் 29-ஆம் தேதி அதிகாலை மூன்று மாவடியில் எதிர்சேவை பூஜை நடைபெறுகிறது. 30ஆம் தேதி சித்ரா பவுர்ணமி அன்று அதிகாலை 5.45 மணிக்கு தங்ககுதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். 


இவ்விழாவினில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கவிருப்பதால், அதற்கான பாதுகாப்பு மற்றும் விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.