ஜம்மு, ஹிமாச்சல், டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, ஓடிஸா, ராஜஸ்தான் மற்றும் விதர்பா உள்ளிட்ட மாநிலங்களில் மேலும் 3 நாட்களுக்கு புழுதிப் புயல் தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு இந்தியாவில் நிலவும் காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக மேலும் 3 நாட்களுக்கு புழுதிப்புயல் வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலின் படி மணிக்கு 70 கிமீ வேகத்தில் புழுதிப் புயல் தாக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 



தலைநகர் டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, சண்டீகர், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், பிகார், தெலங்கானா, ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலும் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) ஏற்பட்ட புழுதிப் புயல், இடி மின்னலுடன் கூடிய மழையால் 41 பேர் உயிரிழந்துவிட்டனர்.


இந்நிலையில், நேற்று மாலை - இரவு வேளையில் திடீரென புழுதிப் புயல் தாக்கியது. மணிக்கு 109 கிமீ வேகத்தில் காற்று வீசியதுடன் மழையும் பெய்தது. இதில் மரங்கள் விழுந்ததில் டெல்லியில் ஒரு பெண் உள்பட இருவர் பலியாகினர். மேலும், 18 பேர் காயமடைந்தனர்.


திடீரென ஏற்ப்பட்ட புழுதிப் புயல் காரணமாக டெல்லியில் தரையிறங்க வேண்டிய 40 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. 25-க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மெட்ரோ ரயில் சேவையிலும் 30 நிமிடங்களுக்கு தடங்கல் ஏற்பட்டது.


டெல்லி தவிர நாடியா, ஹெளரா ஆகிய மாவட்டங்களில் பலத்த இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் சிறுவர் உள்பட 12 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.


உத்தரப் பிரதேசத்தில் கடுமையான புழுதிப் புயல் வீசியல் 18 பேர் உயிரிழந்தனர். 28 பேர் படுகாயமடைந்தனர். ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீகாகுளம், கடப்பா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது, இதில் விவசாயிகள் 5 பேர் உள்பட 9 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


இந்நிலையில் இன்று முதல் வரும் மூன்று நாட்களுக்கு மணிக்கு 70 கிமீ வேகத்தில் புழுதிப் புயல் தாக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.