கடந்த 2009-ம் ஆண்டு விபசார வழக்கில் நடிகை புவனேஸ்வரி சென்னையில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்தும், கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி மற்ற நடிகைகள் குறித்தும் ஒரு பத்திரிகையில் செய்தி வெளியானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கு திரைப்பட நடிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து, நடிகர் சங்கத்தில் கண்டன கூட்டத்தை நடத்தினார்கள். அப்போது, பத்திரிகையாளர்களை, நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், சூர்யா, விஜயகுமார், விவேக், அருண் விஜய், இயக்குனர் சேரன், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் அவதூறாக பேசினார்கள். 


இதுதொடர்பாக ஊட்டியை சேர்ந்த பத்திரிகையாளர் ரோசாரியோ மரியசூசை, இந்த 8 நடிகர்கள் மீதும் ஊட்டி குற்றவியல் கோர்ட்டில், கிரிமினல் அவதூறு வழக்கை தாக்கல் செய்தார்.


இந்த வழக்கு கடந்த பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தது. சம்மன் அனுப்பியும், நடிகர்கள் யாரும் நேரில் ஆஜராகவில்லை. 


இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு செந்தில்குமார் ராஜவேல் 8 நடிகர்களுக்கு எதிராக பிடிவாரண்டை பிறப்பித்து உத்தரவிட்டார். 


இந்த வழக்கு விசாரணையை ஜூன் 17-ம் தேதி தள்ளிவைத்தார். இதையடுத்து, இந்த பிடிவாரண்டை திரும்பப் பெறவேண்டும் என்று ஊட்டி கோர்ட்டில் நடிகர்கள் அனைவரும் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.


இதையடுத்து 8 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.விமலா, ‘பிடிவாரண்டை அமல்படுத்தக்கூடாது’ என்று ஊட்டி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு கடந்த மாதம் 25-ம் தேதி உத்தரவிட்டார்.


இந்த வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-


ஊட்டி கோர்ட்டில் உள்ள அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தபோது, வக்கீல்களும் ஆஜராகவில்லை. மனுதாரர்களும் ஆஜராகவில்லை. அதனால், அவரது இடைக்கால மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தீர்ப்புக்காக பிரதான வழக்கு ஜூலை 5-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.


அதேநேரம், ஊட்டி கோர்ட்டில் நிலுவையில் இருந்த வழக்கு விசாரணைக்கு, 2011-ம் ஆண்டு ஐகோர்ட்டு விதித்த தடையும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. தற்போது, பிரதான மனு தீர்ப்புக்காக வருகிற ஜூலை 5-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் அதுவரை 8 நடிகர்கள் மீதான அவதூறு வழக்கை விசாரிக்க ஊட்டி கோர்ட்டுக்கு இடைக்கால தடை விதிக்கிறேன்.