Actor Marimuthu Last Rites: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட வருசநாடு அருகே உள்ள பசுமலைத்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. குணச்சித்திர நடிகரான இவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல அவர் நடித்து வரும் சின்னத்திரை தொடரான எதிர்நீச்சலில் டப்பிங் பணியில் ஈடுபட்டிருந்த நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் திடீரென காலமானார்.‌


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாரிமுத்துவுக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும், அகிலன் என்ற மகன் மற்றும் ஐஸ்வர்யா என்ற மகள் என இரு பிள்ளைகள் உள்ளனர். சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றைய தினம் திரையுலக பிரபலங்கள், சின்னத்திரை கலைஞர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் என ஏராளமானோர் மாரிமுத்துவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து தகனம் செய்வதற்காக அவரது சொந்த ஊரான தேனிக்கு இன்று அதிகாலை கொண்டு வரப்பட்டது. 


பசுமலைத்தேரியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட மாரிமுத்துவின் உடலுக்கு அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், பல்வேறு அமைப்பினை சேர்ந்தவர்களும் என ஏராளமானோர் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். குறிப்பாக, நடிகர் விமல், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன், திமுக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் உள்பட பலரும் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். 


மேலும் படிக்க | எதிர்நீச்சல் சீரியல்: இனி‌ மாரிமுத்துவுக்கு பதில் இவர் தானா...?


இதையடுத்து பிற்பகலில் அவரது உடல் தகனம் செய்வதற்காக இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. முன்னதாக அவரது குடும்ப வழக்கப்படி சடங்குகள் நடைபெற்றது. பசுமலைத்தேரியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் உள்ள மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட இறுதி ஊர்வலத்தில்  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.‌ பின் மயானத்தில் மாரிமுத்துவின் உடல் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு அவரது மகன் அகிலன் கண்ணீர் மல்க தீ மூட்டினார்.


மாரிமுத்து கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்துள்ளார். ராஜ்கிரண் இயக்கி நடித்த அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசா தான் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். இயக்குநர்கள் மணிரத்னம், சீமான், எஸ்.ஜே. சூர்யா, வசந்த் ஆகியோரிடமும் பணியாற்றியுள்ளார். 2008ஆம் ஆண்டில் 'கண்ணும் கண்ணும்' என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமான மாரிமுத்து, சுமார் 6 வருடங்கள் கழித்து 2014இல் விமல், பிரசன்னா, ஓவியா, அனன்யா, இனியா உள்ளிட்ட நட்சித்திரங்களை வைத்து 'புலிவால்' என்ற திரைப்படத்தையும் இயக்கினார். 


இயக்குநராக செயல்பட்டு வந்த மாரிமுத்து, 2010ஆம் ஆண்டில் இருந்து நடிப்பிலும் கவனம் செலுத்த தொடங்கினார். அதற்கு முன்பே, வாலி, உதயா போன்ற படங்களில் தோன்றியிருந்தாலும் 2011ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய் படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்திருந்தார். அதை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களிலும் அவர் நடிக்கத் தொடங்கினார். சமீபத்தில், கமலின் 'விக்ரம்', ரஜினியின் 'ஜெயிலர்' திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார். கமல்ஹாசன் நடிப்பில் தயாராகி வரும் இந்தியன் 2 திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார் என கூறப்படுகிறது. 


தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் 'எதிர் நீச்சல்' தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரம் மூலம் பரந்துபட்ட அளவில் அவர் பிரபலமானார். அவரின் 'ஏ... இந்தாம்மா' என்ற சிக்னேச்சர் வசனமும் மீம் மெட்டீரியலாக இணையத்தை கலக்க ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | ஒரு நல்ல கலைஞனை இழந்து விட்டோம்!" கமல் கண்ணீர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ