அறிமுக இயக்குநர் சி எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் சபா நாயகன். நாயகிகளாக மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி செளத்ரி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரபல யூடியூப் சேனலான நக்கலைட்ஸின் அருண், எருமைசாணி சேனல் புகழ் ஜெய்சீலன், Certified Rascals ஸ்ரீராம், போன்றோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் மயில்சாமி, துளசி, மைக்கேல் தங்கதுரை, ஸெர்லின் சேத், விவியா சந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அசோக் செல்வனின் ஓ மை கடவுளே திரைப்படத்தில் ஹிட் பாடல்களைக் கொடுத்த லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்துடன் இணைந்து அவரின் சீடர் தினேஷ் புருஷோத்தமன் மற்றும் பிரபு ராகவ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். கிளியர் வாட்டர் பிக்சர்ஸ் சார்பாக அரவிந்த் ஜெயபாலன், ஐ சினிமா சார்பாக அய்யப்பன் ஞானவேல் மற்றும் கேப்டன் மெகா எண்டர்டெயின்மெண்ட் சார்பாக கேப்டன் மேகவாணன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் டிசம்பர் 15ம் தேதி அன்று வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | “தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்” தமிழ் சினிமாவின் கார்த்திகை தீப பாடல்கள்!


இதில் படத்தின் இயக்குநர் சி எஸ் கார்த்திகேயன் பேசும்போது, ”சபாநாயகன் திரைப்படம் நம் பள்ளிகால மற்றும் கல்லூரி கால மலரும் நினைவுகளை மீள் உருவாக்கம் செய்யும் ஒருவித நாஸ்டால்ஜியா வகை திரைப்படம் ஆகும். நம் எல்லோருக்கும் பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் ஏதோவொரு பெண்ணின் மீது ஒருவித க்ரஸ் இருந்திருக்கும். இப்படி பள்ளி கால வாழ்க்கை, கல்லூரி கால வாழ்க்கை, திருமண வாழ்க்கை என்று வாழ்க்கையின் மூன்றுவித காலகட்டங்களைப் பற்றி இப்படத்தில் பேசி இருக்கிறோம். இப்படம் அனைத்து ரசிகர்களும் குடும்பத்தோடு வந்து பார்த்து ரசிக்கும்படியான திரைப்படம். என் மீது நம்பிக்கை வைத்து முதல்படம் இயக்குவதற்கு வாய்ப்பளித்த ஐ சினிமாஸ் அய்யப்பன் ஞானவேல் மற்றும் பிற தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. வாய்ப்பளித்த நடிகர் அசோக் செல்வனுக்கும் நன்றி” என்றார்.



படத்தின் இசையமைப்பாளரான லியோன் ஜேம்ஸ் பேசும் போது, ”ஓ மை கடவுளே திரைப்படத்தின் பாடல்களுக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக நானும் நண்பர் அசோக்செல்வனும் இந்த சபாநாயகன் திரைப்படத்தில் இணைந்து இருக்கிறோம். இத்திரைப்படம் நாம் நண்பர்கள் குழுவுடன் சேர்ந்து திரையரங்கிற்கு ஒன்றாக சென்று குதூகலிப்பதற்கான திரைப்படம்., படம் மற்றும் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உங்கள் அனைவருக்கும் ரொம்பவே பிடிக்கும் என்று நம்புகிறோம். பாடல்களுக்கான காட்சி தொகுப்புகள் மிகவும் சிறப்பாக அழகான முறையில் எடுக்கப்பட்டு இருந்தது. இது போன்ற ஜாலியான திரைப்படத்திற்கு இசையமைத்தது ஒரு நல்ல அனுபவம். படம் பார்க்கும் அனைவருக்குமே ஒரு நாஸ்டால்ஜியா டிரிப் சென்று வந்த அனுபவம் கண்டிப்பாக கிடைக்கும். அனைவருக்கும் நன்றி.” என்றார்.


நக்சலைட் யூடியூப் புகழ் நடிகர் அருண் பேசும் போது, ”இந்த சபாநாயகன் திரைப்படத்தில் நடித்தது எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு. என் திரைப்பயணத்தில் இப்படி ஒரு முக்கியமான வாய்ப்பைக் கொடுத்த இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயன் அவர்களுக்கு என் முதல் நன்றி. என்னை விட என் மேல் அதிக நம்பிக்கை வைத்திருந்த இயக்குநரின் நம்பிக்கையை நான் காப்பாற்றி இருக்கிறேன் என்று நம்புகிறேன். இப்படத்தில் என்னோடு சேர்ந்து நடித்த சக யூடியூபர்ஸ் ஆன ஜெய்சீலன் ஸ்ரீராம் போன்றோருக்கு என் வாழ்த்துக்கள். அவர்களோடு இணைந்து நடித்தது மறக்க முடியாத மிகச்சிறந்த அனுபவம். அது போல் மைக்கேல் அண்ணன் உடன் நடித்ததும் மறக்கமுடியாத அனுபவம். அவருடனான காட்சிகள் இல்லை என்றாலும் கூட, எங்களுக்கு பின்னாலிருந்து பெரும் ஊக்கம் கொடுத்தார். பாலசுப்ரமணியம் சாரின் ஒளிப்பதிவில் நடித்ததை கெளரவமாக கருதுகிறேன். அவருக்கும் மற்ற கேமராமேன்களுக்கும் என் நன்றி, பாடல்கள் மிகவும் சென்சேஷனாக உள்ளது. சிறப்பான பாடல்களை இப்படத்திற்கு கொடுத்த இசையமைப்பாளருக்கு நன்றி. அசோக் சாருக்கு நன்றி” என்று பேசினார்.


நாயகன் அசோக் செல்வன் பேசும் போது, ”எப்பொழுதுமே பத்திரிக்கையாளர்களை சந்திப்பது என்பது எனக்கு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியான தருணம். என்னுடைய எல்லாப் படங்களையுமே மக்களிடம் கொண்டு சேர்த்து நான் இந்த இடத்தில் இன்று இருப்பதற்கு நீங்கள் தான் முழுமுதற்காரணம். சபாநாயகன் ஜாலியான க்ளீனான எண்டர்டெயினர் திரைப்படம். நடனம் மற்றும் நகைச்சுவைக்காக இப்படத்தில் நான் நிறையவே மெனக்கெட்டிருக்கிறேன். இந்த இரண்டுமே எனக்கு இப்படத்தில் புதியதாக இருந்தது. இயக்குநர்கள் இது போன்ற புதிய வாய்ப்பை கொண்டு வரும் போது தான் என்னைப் போன்ற நடிகர்கள் அதை பயன்படுத்திக் கொள்கிறோம். நான் இவ்வளவு ஹியூமர் செய்வேனா என்று மதன் சார் என்னிடம் ஆச்சரியப்பட்டார். முன்பே எனக்கு நக்கலைட்ஸ் சேனல் மிகவும் பிடிக்கும். ஸ்ரீராம் ஜெய்சீலன், அருண் போன்றோர் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். 


படப்பிடிப்பு தளத்தில் அவர்களிடம் பல ரசிக ரசிகைகள் மொய்த்துக் கொண்டு ஆட்டோகிராஃப் வாங்கினார்கள். அப்பொழுது தான் அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டு அவர்களின் வீடியோக்களை அதிகமாக பார்த்தேன். அவர்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. ஜெய்சீலனை ஜூனியர் சிவகார்த்திகேயன் என்றே சொல்லுவேன். தயாரிப்பாளர் அய்யப்பனை எனக்கு மிகவும் பிடிக்கும். லியோன் ஓ மை கடவுளே படத்தில் மிகச்சிறப்பான பாடல்களை கொடுத்திருந்தார்.  மூன்று நாயகிகளுடன் நெருக்கமாக நடித்தது பற்றி கேட்கிறீர்கள். நெருக்கத்தில் என்ன கேப் இருக்க முடியும் சார். என் மனைவி கீர்த்தி அந்த மாதிரி எதுவும் தவறாக நினைக்கமாட்டார். முதல் காதல், பள்ளிகால வாழ்க்கை, போன்ற மறக்கமுடியாத நினைவுகள் நம் மனங்களில் அழியாமல் எப்போதும் இருக்கிறது. அவைகளை கிளறிவிடும் திரைப்படமாக சபாநாயகன் இருக்கும்” என்றார்.


மேலும் படிக்க | இந்த ஆண்டு IMDb-ல் அதிக ரேட்டிங் பெற்ற சிறந்த தமிழ் படங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ