பாகுபலி -2 படத்திற்கு எதிரான கன்னட அமைப்பினர் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகுபலி-2 படத்தை கர்நாடகாவில் திரையிட விடமாட்டோம் என்று கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. காவிரி பிரச்சினையில் கன்னடர்களுக்கு எதிராக பேசிய நடிகர் சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் மட்டுமே இந்த படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிப்போம் என்று அந்த அமைப்புகள் கெடுவிதித்து உள்ளன. இதனால் பாகுபலி-2 படக்குழுவினர் தவிப்பில் இருக்கிறார்கள்.


இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கன்னட மக்களிடம் என் மனப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தன்னுடைய நிலைப்பாடு குறித்து பேசி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார் சத்யராஜ்.


சத்யராஜ் வருத்தம் தெரிவித்ததையடுத்து பாகுபலி -2 படத்திற்கு எதிரான கன்னட அமைப்பினர் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக கன்னட சலுவாளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். மேலும் இனிமேல் சத்யராஜ் கவனமாக பேச வேண்டும் எனவும் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.


போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதால் பாகுபலி படம் 28-ம் தேதி கர்நாடகாவில் ரிலீஸ் செய்வதில் எந்த பிரச்சினையும் எழாது என கூறப்படுகிறது.