சுவாதி-நந்தீஷ் படுகொலை!! சாதி திமிரை துடைத்து அப்புற படுத்தவேண்டும்: பா.ரஞ்சித்
சுவாதி-நந்தீஷ் தம்பதிகளை ஆணவக்கொலை செய்யப்பட்டதற்கு இயக்குனர் பா.ரஞ்சித் தனது வேதனையை தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 11 ஆம் தேதியன்று ஓசூர் காவல்நிலையத்தில் அளித்த சங்கர் என்பவர் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் எனது சகோதரர் நந்தீஷ் மற்றும் அவரது மனைவி சுவாதி இருவரும் உறவினர் வீட்டுக்குச் செல்வதாக கூறி சென்றனர். ஆனால் கடந்த சில தினங்களாக அவர்களை காணவில்லை. இருவரும் இதுவரை வீடு திரும்பவில்லை. அவர்களுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை என்று புகாரில் கூறினார்.
சங்கரின் புகாரை அடுத்து காவல் துறை வழக்கு பதிவு செய்து, விசாரித்து வந்தது. கடந்த நவம்பர் 13 ஆம் தேதி அழுகிய நிலையில் நந்தீஷின் உடலையும் அடுத்து இரண்டு நாளில் சுவாதியின் உடலையும் காவல் துறையினர் மீட்டனர்.
மாற்று சமுதயத்தை சார்ந்த இருவர் திருமணம் செய்ததால், ஆத்திரமுற்ற சுவாதியின் உறவினர்கள தம்பதிகளை கடத்திச்சென்று ஆணவக்கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு பலர் வேதனைகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
தன் படங்களின் மூலம் சமூக கருத்துக்களை ஆழமாக கூறி வரும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பா. ரஞ்சித், தனது ட்விட்டர் பக்கத்தில் "இன்னும் எத்தனை உயிர்களை ஆணவ சாதி தின்னப்போகிறது?" என சுவாதி-நந்தீஷ் ஆணவக்கொலை குறித்து வேதனையை தெரிவித்துள்ளார்.
“இதோ நிகழ்ந்தேறி விட்டது இன்னுமொரு கொடுந்துயர சாதி ஆணவ படுகொலை...வாய் பேச முடியாத காளைகள் எங்கள் குடும்பத்தில் ஒன்று என போராடிய தமிழ் போராளி தோழமைகளே!!! வாய் பேச முடிந்த #நந்தீஸ்_சுவாதி இவர்களை கொன்ற சாதி திமிருக்கு எதிராக திரள்வோம்!! வாருங்கள் நீதி கேட்போம்!!
தயவு செய்து தமிழக ஊடகங்களிடம் மன்றாடி கேட்டு கொள்கிறோம்... துடைத்து அப்புற படுத்த வேண்டிய சாதி கேவலத்துக்கு எதிராக முழுவீச்சில் வினையாற்றுவோம்..இன்னும் எத்தனை உயிர்களை ஆணவ சாதி தின்னப்போகிறது? இந்த கொடுந்துயருக்கு இப்போதே முடிவு கட்டுவோம்!!!
திரையுலக மற்றும் முற்போக்கு எண்ணம் கொண்ட தோழமைகளே!! விழித்துகொள்வோம்! இன்னும் இன்னும் நம் குடும்பங்கள், நம் தெருக்கள், நம் ஊர்கள், நகரங்கள், நம் நாடு என, எல்லா இடங்களிலும் நீக்கமற இருக்கும் இந்த நூற்றாண்டின் கொடூம் இழிவு, இந்த சாதி திமிருக்கு எதிராக திரள்வோம்!!!
தமிழக அரசே உடனடியாக, ஆணவ படுகொலைக்கு எதிராக தனிசட்டத்தை ஆவணப்படுத்து!!”
இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.