களத்தூர் கண்ணம்மாவின் செல்லப் பிள்ளையாய் திரை உலகில் பிறந்து, யாரும் கேட்காத அபூர்வ ராகமாய் மலர்ந்து, புன்னகை மன்னனாய் இதயங்களைக் கவர்ந்து, மகாநதியாய் பெருக்கெடுத்து ஓடி, குருதியில் புனல் கொண்ட நாயகனாய் நிமிர்ந்து, உன்னால் முடியும் தம்பி என அனைவருக்கும் உணர்த்தி, தன் நடிப்பால் அன்பை வசூலித்த வசூல் ராஜாவாகி, சகலகலா வல்லவனாய் பல சாதனைகள் செய்து, தசாவதாரம் மட்டுமல்லாமல் பல அவதாரங்கள் காட்டி, விஸ்வரூபம் எடுத்து நிற்கும் உலக நாயகனின் பிறந்த நாள் இன்று.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய திரைப்பட் உலகின் மிகச்சிறந்த நடிகர், திரைப்பட இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், மக்கள் நீதி மய்யத்தின் (Makkal Needhi Maiam) தலைவர் கமல்ஹாசன் இன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கமலின் பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


சிறு வயதிலேயே திரைப்படங்களில் நடிக்கத் துவங்கிய கமல்ஹாசன் (Kamal Haasan) இன்று வரை, நடிப்பில் தான் காண்பித்த பல வித பரிமாணங்கள் மூலம் மக்களை மகிழ்வித்து வருகிறார். தமிழ் சினிமாவையும் இந்திய சினிமாவையும் உலக அரங்கம் திரும்பிப் பார்க்க வைத்த சிலரில் கமலுக்கு கண்டிப்பாக ஒரு இடம் உள்ளது. நடிப்பில் அவரை அடித்துக்கொள்ள ஆள் இல்லை என்றே கூறலாம்.


பல வித கதாபாத்திரங்களில் அசாத்தியமான நடிப்பை அசால்டாக வெளிக்காட்டி அவர் ரசிகர்களின் மனதைக் கொள்ளைக் கொண்டார். தமிழில் மட்டுமின்றி பல இந்திய மொழிகளில் நடித்துள்ள கமலின் ரசிகர் கூட்டம் உலகம் முழுதும் பரவியுள்ளது.


நடிப்பில் அவருக்கு இருந்த அசாத்திய திறமையால் விருதுகள் அவருக்கு வாடிக்கையாகிப் போயின. உலகம் வியக்கும் வகையில், தன் படங்களில் புத்தம் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு காட்சிகளை அமைத்தார். பலவித அதிநவீன தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகம் செய்த பெருமை அவருக்கு உண்டு.


கமல்ஹாசன் களத்தூர் கண்ணம்மா (1960) இல் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் கால் பதித்தார். இப்படத்திலேயே அவருக்கு குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்கமும் கிடைத்தது. அதன் பிறகு 1975 ஆம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.


மூன்றாம் பிறை (1983) படத்திற்காக கமல் தனது முதல் தேசிய திரைப்பட விருதை வென்றார்.


அவள் அப்படித்தான், 16 வயதினிலே, மூன்றாம் பிறை, அன்பே சிவம், ஹிந்தியின் வந்த ஏக் துஜே கே லியே, ராஜ பார்வை, தேவர் மகன், புன்னகை மன்னன், விருமாண்டி, ஹே ராம், குணா, வறுமையின் நிறம் சிவப்பு, மகாநதி, அவ்வை சண்முகி, தசாவதாரம், விஸ்வரூபம் என பல படங்களில் கமலின் நடிப்பு ஒப்பிட முடியாத அளவில் இருந்துள்ளது. இந்த படங்கள் மட்டுமல்லாமல் அவர் நடித்த ஒவ்வொரு படத்திலும் அவர் நடிப்பிற்கான தனி முத்திரையை படைத்துள்ளார்.


ALSO READ: தமிழக சட்டசபை தேர்தல் 2021: மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் தீவிர ஆலோசனை!!


1979 ஆம் ஆண்டில், கமல்ஹாசனுக்கு கலைமாமணி (Kalaimamani) விருதும், 1990 இல் பத்மஸ்ரீயும், 2014 இல் பத்ம பூஷனும் வழங்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டில் அவருக்கு ஆர்ட்ரே டெஸ் ஆர்ட்ஸ் எட் டெஸ் லெட்ரெஸ் (செவாலியர்) விருது வழங்கப்பட்டது. கமல்ஹாசன் நடிப்புக்காக மூன்று தேசிய திரைப்பட விருதுகளையும் (National Award) 19 ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.


கமலின் படங்களில் பரவலாக சமூக சிந்தனை என்பது காணப்பட்டுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஒரு சமுதாய சிந்தனையாளராக கமலாசன் எப்போதுமே மக்கள் மனதில் ஆழமாக இடம் பிடித்துள்ளார். இருப்பினும், ரஜியின் அரசியல் பிரவேசம் குறித்து பேசப்பட்ட அளவிற்கு கமலின் அரசியல் பிரவேசம் குறித்து மக்கள் அதிகமாக பேசியதில்லை. எனினும், அதிலும் நான் சளைத்தவன் அல்ல என்பது போல, திடீரென தான் அரசியலில் நுழையப்போவதாக அறிவித்த கமல் அதே வேகத்துடன் கட்சியையும் தொடங்கி உறுப்பினர்களையும் நியமித்தார்.


மக்கள் நீதி மய்யம் என்ற கமலின் கட்சி தற்போது தமிழகத்தில் பலரால் பேசப்படும் ஒரு கட்சியாக உருவெடுத்து வருகிறது.


கமல் அறிவாளி, உழைப்பாளி, மக்கள் நலன் கருதும் மனம் கொண்டவர், சமுதாய சீர்திருத்தத்தில் ஆர்வம் கொண்டவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் ஒரு திறமைவாய்ந்த அரசியல்வாதியாகவும் திகழ்ந்து, தமிழக மக்களுக்குத் தேவையானவற்றை தேவையான சமயத்தில் செய்து, தன் கலைத்துறையிலும், அரசியல் அரங்கிலும் வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.


ALSO READ: அம்மாவின் பெயரில் ஆட்சி நடத்துபவர்கள் கொரோனாவை விட ஆபத்தானவர்கள்: கமல்ஹாசன்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR