யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது திருச்சிற்றம்பலம். தனுஷ், நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பிரகாஷ் ராஜ், பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பழம் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ். வயது ஏற ஏற ஒயின் எப்படி கிக் ஏற்றுமோ அப்படி கிக் ஏற்றுகிறார் தனுஷ். தனுஷுக்கு பலமே, பார்க்க பக்கத்து வீட்டு தோற்றம் என்பதுதான். அந்தத் தோற்றம் சமீபமாக தனுஷின் படங்களில் இருக்கவில்லை. தனுஷ் மறந்துபோன அவரது பலத்தை மித்ரன் மிக அழகாக பயன்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் தனுஷின் நடிப்பு அப்படியே மனதுக்குள் ஒட்டிக்கொள்கிறது. யாரடி நீ மோகினி, குட்டி கால தனுஷை இந்தப் படத்தில் நிச்சயம் பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


அதேசமயம். டயலாக் டெலிவிரியில் ஆங்காங்கே வடசென்னை அன்பு வாசம் அடிக்கிறது. மற்றபடி தனுஷின் நடிப்பு அசுரத்தனம். சிம்ப்பிளான கதையில் எப்படி இலகுவாக ட்ராவல் செய்வது என்பதற்கு இந்தப் படத்தில் பங்காற்றிய அனைவரும் கற்றுக்கொடுத்து இருக்கின்றனர். 


தனுஷுக்கு அடுத்ததாக படத்தில் முக்கியமான ரோல் பாரதிராஜாவுடையது. பாண்டியநாடு படத்திலேயே அவர் தனது நடிப்பை நிரூபித்துவிட்டார் என்றாலும் இந்தப் படத்தில் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார் அவர். வயதான தோற்றத்தில் பாரதிராஜா செய்வது எல்லாம் ரசிக்கும்படி இருக்கின்றன. குறிப்பாக தனுஷுக்கும், பாரதிராஜாவுக்கும் உள்ள கெமிஸ்ட்ரி கோலிவுட்டின் புதிய க்யூட் காம்போ. இருவரும் போட்டிப்போட்டுக்கொண்டு நடித்திருக்கின்றனர். குறும்புத்தனமாகட்டும், எமோஷனல் ஆகட்டும்; அனைத்து ஏரியாவிலும் இருவரும் தூள் கிளப்பியிருக்கின்றனர். தனுஷ், பாரதிராஜா கெமிஸ்ட்ரியை பார்க்கும்போது யாரடி நீ மோகினி தனுஷ், ரகுவரன் ஞாபகத்திற்கு வரலாம். அப்படி வந்தாலும் தவறில்லை.



அதேபோல் பிரகாஷ் ராஜ் தனது நடிப்பில் வழக்கம்போல் அசத்துகிறார். குறிப்பாக, தனுஷுடனான உரையாடல், குற்ற உணர்ச்சியில் கூனி குறுகுவது என அதகளம் செய்திருக்கிறார் செல்லம். ராஷி கண்ணாவுக்கு சிறிது ஸ்பேஸ் இருந்தாலும் ப்ரியா பவானி ஷங்கருக்கு அது சுத்தமாக இல்லை. எதற்காக அந்தக் கதாபாத்திரம் என்று யாருக்கும் (இயக்குநருக்கு?)தெரியவில்லை. 


அனைவரையும்விட படத்தில் ஸ்கோர் செய்திருப்பது நித்யா மேனன். நடிப்பு ராட்சஷி. குண்டு விழிகளால், க்யூட் சிரிப்பால், கொஞ்சும் குரலால், திகட்டாத நடிப்பால் படம் பார்க்கும் அனைவரின் கண்களையும், மனதையும் கட்டிப்போட்டுவிட்டார். தனுஷுடனான நட்பு, பிரகாஷ் ராஜிடம் வந்து சண்டை போடுவது, பாரதிராஜாவிடம் உரிமையோடு இருப்பது என மனுஷி நடிப்பில் மெர்சல் காட்டியிருக்கிறார்.  



ஒருக்கட்டத்தில் தனுஷ், நித்யா மேனனிடம் முக்கியமான விஷயம் குறித்து பேசும்போது என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அதை கடந்துபோகும் இடத்தில் நித்யா மேனன் நடிப்பு பல அப்ளாஸ்களை அள்ளுகிறது. அடடா நித்யா மேனன் இப்படி சொல்லிவிட்டாரே என்ற எண்ணமும் ரசிகர்களிடம் எழுவது ப்ளஸ். 


இசையை பொறுத்தவரை அனிருத்தின் பாடல்கள் நன்றாக இருந்தாலும் பிஜிஎம்மில் கூடுதல் மெனக்கெட்டிருக்கலாம். குறிப்பாக பிஜிஎம்மின் சில இடங்களில் 3 பட பாடல்களின் வாசம் அடிப்பது போல் தோன்றுகிறது. ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் திருச்சிற்றம்பலத்திற்கு பலம் சேர்க்கின்றன.



இருந்தாலும், பிரகாஷ் ராஜ் மீதான திருச்சிற்றம்பலத்தின் (தனுஷ்) கோபத்திற்கான காரணம் இன்னும் கொஞ்சம் பலமாக இருந்திருக்கலாம். ஏனெனில், பிரகாஷ் ராஜ் வேண்டுமென்றே ஒரு விபரீதத்தை நிகழ்த்தவில்லை. அது திருச்சிற்றம்பலத்திற்கும் தெரிந்திருக்கிறது. எனில், தந்தை தெரியாமல் செய்த தவறுக்காக மகன் அத்தனை வருடங்களாகவா பேசாமல் இருப்பான். அதுமட்டுமின்றி பாரதிராஜா நினைத்திருந்தால் அந்த சூழ்நிலையை எப்போதோ சுமூகமாக்கி இருக்கலாமே என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுகிறது. அதேபோல், பிரகாஷ் ராஜும், தனுஷும் ஒரே வீட்டில் பேசாமல் இருப்பது வேலையில்லா பட்டதாரி ஃபீலிங்கையும் கொடுக்கிறது. 


இதுதான் நடக்கப்போகிறது என்று யூகிக்கக்கூடிய கதைதான் என்றாலும் மித்ரன் ஜவஹர் அதை படமாக்கிய விதம் அருமை. சின்ன சின்ன எமோஷன்கள், வசனங்கள் என பல விஷயங்கள் படத்தில் ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன. தமிழில் இதுபோன்று யதார்த்தத்துடன் எமோஷனலாக கனெக்ட் ஆகும் படங்கள் வந்து நீண்ட நாள்களாகிவிட்டன. 



தொடர் துப்பாக்கிச் சூடு, அரசியல் வசனங்கள், கொலை, கடத்தல், பைக் சேசிங், போதை என திரையில் சமீபமாக பார்த்து பார்த்து சலித்துக்கிடக்கும் தமிழ் ரசிகர்கள் திருச்சிற்றம்பலம் சென்றால் திருப்தியான மனதோடு திரையரங்கை விட்டு வெளியே வரலாம். திருச்சிற்றம்பலம் - நீண்ட நாள்கள் கழித்து தமிழில் ஒரு ஃபீல் குட் படம்.


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ