ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நன்றி சொன்ன ‘காத்துவாக்குல’ டீம் - ரணகளத்திலும் குதூகலம்!
ராஜஸ்தான் - டெல்லி இடையேயான போட்டியின் ஸ்கோர் போர்டை வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் டீம் வித்யாசமான விளம்பரம்.
ஐபிஎல்லில் நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டி பல்வேறு சர்ச்சைகளுடன் நிறைவுபெற்றது.
இறுதி ஓவரின்போது அம்பயரிடம் நோ-பால் கேட்டுக் கொடுக்காததால் கடுப்பான ரிஷப் பந்த், தனது அணி வீரர்களை பெவிலியனுக்கு அழைத்த விவகாரத்தில் தற்போது அபராதம் விதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சண்டைகளெல்லாம் ஒருபுறம் இருக்க, இப்போட்டியை வைத்து தமது படத்துக்கு வித்யாசமாக விளம்பரம் செய்துள்ளது காத்துவாக்குல ரெண்டு காதல் படக்குழு.
கிரிக்கெட்டுக்கும் இந்தப் படத்துக்கும் என்ன சம்பந்தம் எனக் கேட்கிறீர்களா? சம்பந்தம் இல்லைதான்; ஆனால் சம்பந்தப்படுத்தியுள்ளது படக்குழு. அதாவது இப்போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, ஜாஸ் பட்லரின் அதிரடியில் 20 ஓவருக்கு 222/2 ரன்கள் குவித்தது. இந்த வித்யாசமான ஸ்கோரைத்தான் படக்குழு கண்டெண்ட் ஆக்கியுள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் “டூ டூ டூ” என்றொரு பாடல் இடம்பெற்றுள்ளது. ராஜஸ்தான் அடித்த 222/2 உடன் இந்தப் பாடலின் வரிகள் ஒத்துப்போவதுடன் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியான அதே நாளில்தான் இப்போட்டியும் நடந்துள்ளது. எனவே ஸ்கோர் போர்டையும் படத்தின் போஸ்டரையும் வெட்டி ஒட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது படக்குழு. விக்னேஷ் சிவனும் இதை ரீட்வீட் செய்துள்ளார். இந்தப் பதிவு இணையத்தில் தற்போது ட்ரெண்ட் ஆகிவருகிறது.
மேலும் படிக்க | பயிற்சியாளரை மைதானத்திற்குள் அனுப்பிய பந்த்! ஐபிஎல் போட்டியில் சர்ச்சை
கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை 111 என்றால் நெல்சன், 222 என்றால் டபுள் நெல்சன் என கூறுவதுண்டு. ராஜஸ்தான் அடித்த 222 ரன்களை வைத்து காத்துவாக்குல பட டீம் கண்டெண்ட் ஆக்கிய நிலையில் 222வை வைத்து விக்னேஷ் சிவனின் நண்பர் டைரக்டர் நெல்சனும் ஏதேனும் கண்டெண்ட் ஆக்கியிருக்கலாம் என நெட்டிசன்ஸ் ஐடியா கூறிவருகின்றனர்.