பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படத்துக்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் யூ சான்றிதழ் வழங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை இந்திய சினிமாவில் சமீபகாலமாக புகழ்பெற்ற பிரபலங்களின் பயோபிக் திரைப்படங்கள் உருவாவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறை விவரிக்கும் வர்த்தக ரீதியான திரைப்படம் 23 மொழிகளில் தயாராகியுள்ளது. 


இத்திரைப்படத்தில் பிரதமர் மோடியாக விவேக் ஓபராய் நடித்துள்ளார். பிஎம் நரேந்திர மோடி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் கடந்த 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்ப்பு மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக படத்தை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டது. 


23 மொழிகளில் உருவாகும் இந்த திரைப்படம் மக்களவை தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எனவே இந்த திரைப்படத்தினை தேர்தல் நேரத்தில் வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் மனு அளித்தன. 


47 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இந்த படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பினர். அதில் “தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த படத்தை வெளியிட அனுமதிப்பது தேர்தல் விதிமீறல் ஆகும்” என்று கூறினர்.


இதற்கிடையில், பி.எம். நரேந்திர மோடி படம் 11ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் பி.எம். நரேந்திர மோடி படத்துக்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (சிபிஎப்சி) யூ சான்றிதழ் வழங்கியுள்ளது.