ரஜினிகாந்த் பிறந்த நாளில் புதிய கட்சியா?
ரஜினிகாந்த் பிறந்த நாளில் புதிய கட்சி அறிவிப்பு வெளிவரும் என்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்தபோது, “சூழ்நிலை ஏற்பட்டால் அரசியலுக்கு வருவேன். போருக்கு தயாராக இருங்கள்” என்று சூசகமாக அறிவித்ததில் இருந்து தமிழக அரசியல் கட்சிகள் பரபரப்பாகி எதிர்ப்பு, ஆதரவு குரல்கள் எழுப்பி வருகின்றன.
காலா படப்பிடிப்புக்காக மும்பையில் 2 வாரங்கள் முகாமிட்டு இருந்தபோது கட்சி நடத்தும் நடிகர்கள் மற்றும் அரசியல் கட்சிகளில் பதவி வகிக்கும் வட இந்திய நடிகர்கள் ஆகியோரிடமும் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது. பலரும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு ஆதரவான கருத்துக்களை கூறியுள்ளனர்.
இந்நிலையில் ரஜினிகாந்த் தனது பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி ரசிகர்கள் மாநாட்டை நடத்தி அரசியல் பிரவேசம் பற்றிய முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கட்சி பெயர், கொடி, சின்னம் போன்றவற்றை அன்றைய தினம் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.