சிரஞ்சீவியை மற்ற நடிகர்களும் ஃபாலோ பண்ணுங்க - தமிழிசை வேண்டுகோள்
திரைப்பட துறையில் ஏழை தொழிலாளர்களுக்கென மருத்துவமனை கட்டும் சிரஞ்சீவியை மற்ற நடிகர்களும் பின்பற்ற வேண்டுமென தெலங்கான ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் 'மெகா ஸ்டார்' என அழைக்கப்படுபவர் நடிகர் சிரஞ்சீவி . இவர் ரஜினியின் நெருங்கிய நண்பரும்கூட. சிரஞ்சீவி இன்று தனது 67ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் தன் பிறந்த நாளையொட்டி, தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கென்று தனி மருத்துவமனை ஒன்றை கட்டுவதாக அறிவித்துள்ளார். மறைந்த தனது தந்தை கொனிடேலா வெங்கட்ராவ் நினைவாக இதனை கட்டுவதாகவும், அடுத்த ஆண்டு தனது பிறந்த நாள் முதல் இந்த மருத்துவமனை செயல்படும் எனவும் கூறியுள்ளார். ஹைதராபத்தில் உள்ள சித்தாபுரி பகுதியில் அமைய உள்ள இந்த மருத்துவமனைக்கு, தெலுங்கு கிரிக்கெட் சங்கம் 20 லட்சம் ரூபாய் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. மருத்துவமனை கட்ட இசை நிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்டி தருவதாக இசையமைப்பாளர் தமனும் உறுதியளித்துள்ளார்.
சிரஞ்சீவியின் இந்த முடிவு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவருக்கு சாமானியர்கள் முதல் பிரபலங்கள்வரை பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகின்றனர்.
அந்தவகையில் தெலங்கானா மாநிலத்தின் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும் சிரஞ்சீவிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் அவர் இதுகுறீத்து தனது ட்விட்டர் பக்கத்தில், “தெலுங்கு திரைப்பட நடிகர் சிரஞ்சீவிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். திரைப்பட தொழிலாளர்கள் நலனுக்காக புதிய மருத்துவமனை கட்டப்போவாதாக அறிவித்துள்ளது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும், ஏழை திரைப்பட தொழிலாளர்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட உள்ளது என்று அறிவித்துள்ள சகோதரர் சிரஞ்சீவி அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். திரைப்படத் துறையில் ஏழைத் தொழிலாளர்களின் நலனுக்காக மற்ற நடிகர்களும் சகோதரர் சிரஞ்சீவியை பின்பற்ற வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக மருத்துவமனை கட்டுவது தொடர்பாக நடிகர் சிரஞ்சீவி கூறுகையில், “நான் சம்பாதித்தது எல்லாம் சினிமாவில்தான். சினிமா தொழிலாளர்களின் உழைப்பால்தான். அதை அவர்களுக்கு சிறிதளவேனும் திருப்பித் தருவதற்காகத்தான் இந்த மருத்துவமனையை கட்ட இருக்கிறேன். எத்தனை கோடி ரூபாய் செலவானாலும் இதை கட்டி முடிப்பேன்” என கூறியிருந்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ