ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘நோட்டா’ என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி மெஹ்ரீன், நடிகர் சத்யராஜ், படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர், ஒளிப்பதிவாளர் சாந்தா ரவி.கே. சந்திரன், இசையமைப்பாளர் சாம் சி.எஸ், கலை இயக்குநர் கிரண், எடிட்டர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா, ஸ்டைலீட் ஷ்ராவ்யா சர்மா என படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும், தயாரிப்பாளர் ஷிபு தமின்ஸ், முன்னணி இயக்குநர்கள் பா. இரஞ்சித், எஸ்எம்எஸ் ராஜேஷ், டீகே, ஷாந்தகுமார், விஜய் வரதராஜ், சந்தோஷ் பி. ஜெயக்குமார் ஆகியவர்களுடன் பிரபல விநியோகஸ்தர்கள் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


இதில் இயக்குநர் பா. இரஞ்சித் பேசுகையில்,‘ஸ்டூடியோ கிரீன் என்ற பட நிறுவனத்தின் ஆதரவால் தான் என் திரையுலக பயணத்தைத் தொடங்கினேன். இந்நிறுவனம் தயாரித்த மெட்ராஸ் என்ற படம்தான் எனக்கான பாதையை தெளிவுப்படுத்தியது. அதே போல் தமிழ் சினிமாவில் ‘நோட்டா ’படமும் மிக முக்கியமான படமாக இருக்கும். ஏனெனில் படத்தின் பெயரிலேயே அரசியல் இருக்கிறது. இயக்குநர் ஆனந்த் சங்கரின் பங்களிப்பு பெரிய அளவில் இருக்கும் என்று நம்புகிறேன்.


தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசுகையில், ‘ரஜினிகாந்த் சார் அரசியலில் வருவார் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உறுதியாக நினைத்தேன். ரஜினி சார் இரஞ்சித்துடன் இணைந்து கபாலி படம் முடித்தபிறகு அரசியலுக்கு வருவார் என்று எண்ணியிருந்தேன். வரவில்லை. தற்போது இரஞ்சித்துடன் இரண்டாவது படம் செய்து முடித்தவுடன் அறிவித்திருக்கிறார். இது தான் இரஞ்சித்தின் பலம். இரஞ்சித் தன்னுடன் யார் பழகினாலும் அவர்களுக்கும் அரசியலின் முக்கியத்துவத்தை பேசி உணர்த்திவிடுவார்.


இரு முகன் படத்தின் டீஸரைப் பார்த்து பிரமித்து போனேன். அதே பிரமிப்பு படத்தைப் பார்க்கும் போதும் இருந்தது. அப்போதே இயக்குநர் ஆனந்த் சங்கரை வைத்து ஒரு படத்தை தயாரிக்கவேண்டும் என்று திட்டமிட்டேன். பல முறை சந்திப்பு நடைபெற்றது. 


நல்லதொரு திரைக்கதை இருந்தால் சொல்லுங்கள். படம் தயாரிப்போம் என்று வாக்குறுதி கொடுத்திருந்தேன். அவர் இந்த கதையை என்னிடம் சொல்லி, அதனை எப்படி உருவாக்கப்போகிறேன் என்ற விவரத்தையும் தெரிவித்தபோது நான் வியப்படைந்தேன். பிறகு தான் இந்த படத்தை தொடங்கினோம் என அவர் கூறினார்.


இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.