‘ஜிகர்தண்டா’ படத்தில் ஒரு காட்சி வரும். சினிமாவில் இயக்குநர் ஆக முடியாமல் போன பெட்டிக்கடைக்காரர் மணி, தனது சிவநேசன் - குருவம்மா பாத்திரங்களை அனைவரிடமும் சொல்லிக்கொண்டிருப்பார். ஒருகட்டத்தில் கதாநாயகன் கார்த்திக் வாய்ப்புக் கிடைத்தும் குழம்பிய நிலையில் வந்து மணியின் பெட்டிக்கடை முன்பு வந்தமர்வார். அப்போது கதாநாயகன் கார்த்தியிடம், பெட்டிக்கடைக்காரர்
மணி பேசும் வசனமிது, ‘எல்லாருக்கும் ஒரு வாய்ப்பு வரும். அது ஒரு தேவதை மாதிரி. அத மதிச்சா திரும்ப...திரும்ப வரும். உதாசீனபடுத்துனா திரும்ப வரவே வராது.!’ 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதென்பது கலைஞர்களுக்கு யதேச்சையாக நிகழ்ந்திருக்கிறது என்பதை வரலாற்றைத் திரும்பிப் பார்க்கையில் அறிய முடிகிறது. வறுமையை மட்டுமே இளமைக் காலத்துக்குக் கொடுத்த உலகப் புகழ்பெற்ற சார்லி சாப்ளினுக்கும், உலகப் புகழ் பெற்றிருக்க வேண்டிய மனோரமாவுக்கும் வாய்ப்பென்னும் அந்த ‘தேவதை’ வந்திருக்கிறது. ஆனால், இந்த மாபெரும் கலைஞர்கள் அதை மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் அல்லது கலை அந்த வாய்ப்பின் மூலம் இந்தக் கலைஞர்களை உலகறியச் செய்துள்ளது. 


தனிமை, வெறுமை, வறுமை என வாழ்வில் எந்த நம்பிக்கையுமில்லாமல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ‘கிட் ஆட்டோ ரேஸ் இன் வெனிஸ்’ எனும் திரைப்படத்தின் படப்படிப்பை சார்லி சாப்ளின் பார்த்துக்கொண்டிருந்தார்.! தமிழ்நாட்டின் காரைக்குடி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ‘அந்தமான் காதலி’ என்ற நாடகம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அதை கோபிசாந்தா என்ற பெண் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.! 


மேலும் படிக்க | தவிர்க்க முடியாத தனிப் பெருங்கலைஞன்- # HBD கவுண்டமணி!


‘ட்ராம்ப்’ என்னும் கதாபாத்திரத்தில் நடிக்க சார்லி சாப்ளினுக்கு ஒரு வாய்ப்பு வருகிறது. ‘கிட் ஆட்டோ ரேஸ் இன் வெனிஸ்’ படத்தின் கேமராமேன் அவசர அவசரமாக சாப்ளினை அழைக்கிறார். சட்டென சென்ற சாப்ளினிடம், ‘அவசரமாக ஏதாவது வேடிக்கையான மேக்கப்பை போட்டுக்கொண்டு வாருங்கள்’ என்கிறார். என்ன செய்வது என்று சாப்ளினுக்குப் புரியவில்லை. கேமராமேன் அப்படிச் சொன்னதும் தனக்கு எந்தத் திட்டமும் இல்லை என்று பதிவு செய்திருக்கிறார் சாப்ளின். நேராக ஆடை அறைக்குச் சென்றிருக்கிறார். அங்கு ஒரு நோட்டம் விட்டிருக்கிறார். மேக்கப்பைக் காட்டிலும் ஆடைகளைக் கொண்டு வேடிக்கையாக எதையாவது முயன்று பார்க்கலாம் என்று தோன்றியிருக்கிறது சாப்ளினுக்கு. கைக்குக் கிடைத்த தொளதொள பேன்ட், இறுக்கமான கோட், நீண்ட தொப்பி, காலுக்குப் பொருந்தாத ஷு ஆகிய அனைத்தையும் மாட்டிக்கொண்டு வந்து கேமராமேன் முன்னாடி வந்து நிற்கிறார். அதற்குப் பின்னால் நடந்த அத்தனையும் வரலாறு.!


பரபரப்பாக அரங்கேற்றிக் கொண்டிருந்த அந்தமான் காதலி நாடகத்தில் பெண் வேடம் போட்ட ஒருவருக்கு சரியாக பாட வரவில்லை. வேறு யாரை நடிக்க வைப்பது என்று தவித்து வந்த நாடக குழுவின் கண்ணில் கோபிசாந்தா தென்பட்டுள்ளார். அந்தப் பெண் கதாபாத்திரத்தில் கோபிசாந்தா அற்புதமாக நடித்துமுடித்தார். அந்த நாடகத்தில் இவருடைய பாட்டையும், குரல் இனிமையையும், நடனத்தையும் பார்த்த அனைவரும் ‘யார் அந்த பெண்?’ என்றே அதிகம் வினவினர். 


இந்த நாடகத்தில் பணியாற்றிய இயக்குனர் சுப்பிரமணியனின் உதவியாளர் திருவேங்கடமும், ஆர்மோனியம் வாசித்த தியாகராஜனும் நாடகத்தில் அசத்தலாக நடித்த கோபிசாந்தாவை வெகுவாக பாராட்டினர். அதுமட்டுமல்லாமல், அவர்கள் இருவரும் கோபிசாந்தாவுக்கு ஒரு பெயரையும் வைத்தனர். அன்றிலிருந்து கோபிசாந்தா ‘மனோரமா’ ஆனார். அதன்பிறகு நடந்த அத்தனையும், உணர்வெழுச்சியூட்டும் தமிழ்நாட்டின் மாபெரும் நடிகரின் சாதனைகளும், விருதுகளும், தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் அன்பின் கதைகள்.!


கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக் காலத்தின் தமிழ்ச்சினிமா பக்கங்களைப் புரட்டினால் ஒவ்வொரு பக்கங்களிலும் மனோரமாவின் பெயரைக் காண முடியும். 
மாபெரும் அந்தக் கலைஞருக்கு இன்று பிறந்த நாள். தமிழ்நாட்டு மக்களால் செல்லமாக ‘ஆச்சி’ என அழைக்கப்படும் மனோரமாவின் பிறந்த நாளான இன்று, மீண்டும் அந்த வரிகளை அசைபோடுவோம்.
‘எல்லாருக்கும் ஒரு வாய்ப்பு வரும்.....அது ஒரு தேவதை மாதிரி......!!!!’


மேலும் படிக்க | நாகேஷை புறக்கணிக்கிறதா அரசு? - கமல்ஹாசன் காட்டம்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR