அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானை பல மணி நேரம் பிடித்து வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஷாருக்கான், அதிகாரிகளின் இந்த செயல்பாடுகள் குறித்து வேதனை தெரிவித்துள்ளார். இதற்கு அமெரிக்க அதிகாரிகள் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஷாருக்கான் டுவிட்டரில் கூறியாதாவது:-  உலகம் முழுவதிலும் இருக்கும் பாதுகாப்பு நடைமுறைகளை நான் முழுமையாக புரிந்து கொள்கிறேன். அவற்றை மதிக்கிறேன். ஆனால், அமெரிக்கா செல்லும் ஒவ்வொரு முறையும் விசாரணை என்ற பெயரில் அதிகாரிகள் நடந்தும் கொள்ளும் முறை வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும் அவர் பதிவிட்டுள்ள மற்றொரு டுவிட்டில், இதில் மற்றொரு நல்ல விஷயம் காத்திருந்த நேரத்தில் சில அருமையான போகிமோன் படங்களை எடுத்தேன் என குறிப்பிட்டுள்ளார்.


ஷாருக்கான் அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக பிடித்து வைக்கப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன் 2009-ம் ஆண்டு நியூஜெர்சி விமான நிலையத்திலும், 2012-ம் ஆண்டு நியூயார்க் விமான நிலையத்திலும் சோதனை மற்றும் விசாரணை என்ற பெயரில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பிடித்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விசாரணையின் போது ஷாருக்கான் யாரிடமும் போனில் பேசக் கூட அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.


இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சக அதிகாரி:-  சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், அமெரிக்க அதிகாரிகளுக்கே இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதாகவும் கூறியுள்ளார்.


இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்ட் வர்மா கூறுகையில்:- விமான நிலையத்தில் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இது போன்று மீண்டும் நடைபெறாமல் பார்த்து கொள்கிறோம். உங்களின் பணி, அமெரிக்கர்கள் உள்ளிட்ட கோடிக்கணக்கான மக்களை மகிழ்ச்சியடைய வைக்கிறது எனக்கூறியுள்ளார்.


இதற்கு பதிலளித்துள்ள ஷாருக்கான், பிரச்னை எதுவுமில்லை. பாதுகாப்பு நடைமுறைகளை நான் மதிக்கறேன். இதற்கு மேல் எதுவும் எதிர்பார்க்கவில்லை எனக்கூறியுள்ளார்.