தெலுங்கு சினிமாவில் இப்படி ஒரு படமா? காமி படத்தின் திரைவிமர்சனம்!
Gaami Movie Review: வித்யாதர் காகிதா இயக்கத்தில் விஷ்வக்சென், சாந்தினி சௌத்ரி, அபிநயா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள காமி படம் கடந்த வாரம் வெளியானது.
Gaami Movie Review: தெலுங்கு சினிமாவில் அதிகப்படியாக எப்போதும் மசாலா படங்கள் தான் அதிகம் வெளியாகும். 4 சண்டை காட்சிகள், 5 பாடல்கள், ஹீரோ பில்டப் என இப்படிபட்ட படங்கள் வெளியாகும் வேளையில் வித்தியாசமான கதைக்களம் கொண்ட காமி என்ற படம் கடந்த வாரம் வெளியாகி உள்ளது. அறிமுக இயக்குனர் வித்யாதர் காகிதா இயக்க வித்யாதர் காகிதா & பிரத்யுஷ் வாத்யம் திரைக்கதை எழுதி உள்ளார். இந்த படத்தில் விஷ்வக்சென், சாந்தினி சௌத்ரி, அபிநயா, முகமது சமத், ஹரிகா பெடாடா, சாந்தி ராவ், மயங்க் பராக் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஸ்வீகர் அகஸ்தி இசையமைக்க, நரேஷ் குமரன் பின்னணி இசையமைத்துள்ளார். விஸ்வாந்த் ரெட்டி செலுமல்லா ஒளிப்பதிவு மற்றும் ராகவேந்திர திருன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். கடந்த மார்ச் 8ம் தேதி திரையரங்களில் வெளியான இப்படத்தை தமிழகத்திலும் அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
ஹீரோ விஷ்வக்சென் வாரணாசியில் அகோரியாக வாழ்ந்து வருகிறார். அவரை மனிதர்கள் யாரேனும் தொட்டால் அவரது உடல் முழுவதும் கருப்பாக மாறி மயங்கி விழும் அபூர்வ நோயை கொண்டுள்ளார். இதனை சரி செய்ய இமயமலையில் துரோணகிரி மலையில் 36 வருடங்களுக்கு ஒரு முறை வளரும் மாலி பத்ரா என்ற ஒளிரும் காளான் தேவைப்படுகிறது. மற்றொரு கதையில் இரண்டு மருத்துவர்கள் மனிதர்களை அடைத்து வைத்து பயங்கரமான பரிசோதனைகளை நடந்துகின்றனர். இன்னொரு கதையில், தேவதாசியாக இருந்து வரும் அபிநயா தனது மகளுடன் வாழ முயற்சி செய்து வருகிறார். இந்த மூன்று பேரின் பயணமும் ஒரு இடத்தில் ஒன்று சேருகிறது. இறுதியில் விஷ்வக்சென் அந்த காளான் கண்டுபிடித்தாரா? மற்றவர்களின் கதை இவரது வாழக்கையில் எப்படி தொடர்புடையது என்பதுதான் காமி படத்தின் கதை.
இவ்வளவு பெரிய படத்தை மிகக்குறைந்த பட்ஜெட்டில் தரமான படமாக எடுத்துள்ளனர். இதற்கு இயக்குனர் வித்யாதர் ககிதா, தொழில்நுட்ப குழுவினர் மற்றும் படத்தில் பணியாற்றியுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஹீரோ விஷ்வக்சென் ஒரு அகோரியாக அவரது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் பல இடங்களில் மிகவும் சிரமப்பட்டு நடித்திருப்பது திரையில் தெரிகிறது. அதிக டயலாக்குகள் இல்லாமல், தனது நடிப்பின் மூலியமே படத்தில் பேசியுள்ளார். சாந்தினி சௌத்ரி ஒரு மருத்துவர் கதாபாத்திரத்தில் நல்ல ஒரு நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அபிநயா ஒரு தேவதாசியாக உறுதியான மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கைதியாக நடித்துள்ள முகமது சமத் மற்றும் ஹரிகா பெத்தா ஆகியோர் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
படத்தில் இடம்பெற்றுள்ள பல காட்சிகள் பிரமிக்க வைக்கும் தரத்தில் உள்ளன. இமயமலையை காட்டும் காட்சிகள் படத்தின் பிரம்மாண்டத்திற்கு பங்களிக்கிறது. ஆனாலும் படத்தின் பட்ஜெட் கருதி சிலவற்றை சமரசம் செய்துள்ளனர். அது திரையில் அப்பட்டமாக தெரிகிறது. பாதி இடங்களில் நேரடியாகவும், பாதிக்கும் மேல் கிரீன் மேட்டிலும் ஷூட் செய்துள்ளனர். கதையாக சுவாரஸ்யமாக இருந்தாலும், திரைக்கதை மெதுவாகவே செல்கிறது. குறிப்பாக முதல் பாதி சில இடங்களில் நம்மை சோதிக்கிறது. கிளைமாக்ஸ் ட்விஸ்டை நம்பி மொத்த படத்தையும் எடுத்துள்ளனர். ஆனால் இதே போன்று கிளைமாக்ஸ் கொண்ட காட்சிகள் வேறு சில படங்களில் பார்த்துவிட்டதால் அவ்வளவாக எடுபடவில்லை.
இசை அமைப்பாளரின் பங்களிப்பு படத்திற்கு கூடுதல் சிறப்பு. பின்னணி இசையிலும் இயக்குனர் இன்னும் வேலைவாங்கி இருக்கலாம். அதே சமயம் எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக உள்ளது. மேலும் படத்தில் நிறைய லாஜிக் மிஸ்டேக்குகளும் உள்ளன. அறிமுக இயக்குனர் வித்யாதர் தனது முதல் படத்திலேயே இப்படி ஒரு கதையை தேர்வு செய்ததற்கு பாராட்டுக்குரியவர். மொத்தத்தில் இந்த காமி படம் ஒரு தனித்துவமான சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்குகிறது. நடிகர்களின் நடிப்பு மற்றும் தொழில்நுட்ப சிறப்பம்சங்கள் படத்தின் கூடுதல் சிறப்பு.
மேலும் படிக்க | Lover OTT: லவ்வர் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது? வெளியானது செம அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ