சிறந்த பேச்சாளரும் எழுத்தாளருமான நாஞ்சில் சம்பத், ம.தி.மு.க-வில் இருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்தார். பொதுக்கூட்ட மேடைகளில் முழங்கிய அவர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா அணியுடன் பிணங்கினார். ஜெயலலிதா இவருக்கு வழங்கிய இன்னோவா காரை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்தார். பின்னர் மீண்டும் சசிகலா அணியில் இணைந்த இவர் தினகரன் ஆதரவாளராக மாறினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் வெற்றி பெற்ற பின்னர், பல மாவட்டங்களில் பொதுக் கூட்டங்கள் நடத்தினார். அந்த கூட்டங்களில்  நாஞ்சில் சம்பத் கலந்துகொள்ளாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் தினகரன் அணியிலிருந்து நாஞ்சில் சம்பத் வெளியேற இருப்பதாக கடந்த சிலநாட்களாக தகவல் பரவியது.


இதையடுத்து தினகரன் அணியைச் சேர்ந்த புகழேந்தி உள்ளிட்டோர் கன்னியாகுமரி மாவட்டம் மணக்காவிளையில் உள்ள நாஞ்சில் சம்பத் வீட்டுக்கு நேற்று வந்தனர். அவருடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு நாஞ்சில் சம்பத் தினகரன் அணியில் தொடருவார் என தெரிவித்தனர்.  


இந்த நிலையில் இன்று காலை மணக்காவிளையில் தனது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். 


செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது....!


தினகரனின் செயல்பாடுகள் திராவிட கொள்கைக்கு எதிராக இருப்பதாகவும், அதனால் தினகரன் அணியில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்தார். இனி இலக்கிய மேடைகளில் பேச இருப்பதாகவும் தெரிவித்தார். 


கடந்த 15-ம் தேதி தினகரன் மதுரை மேலூரில், 'அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்' என்ற அமைப்பை துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.