#CauveryIssue: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
தமிழகம் புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முழுக் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. முழு அடைப்புப் போராட்டம் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. முழுஅடைப்புப் போராட்டத்துக்கு ஆளும் காங்கிரஸ் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதன்படி இன்று போராட்டம் காலை 6 மணி முதல் தொடங்கியது. இதற்கு பெரும்பாலான கடைகள் ஒத்துழைப்பு நல்கியுள்ளன. இதற்கு போக்குவரத்து தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன. தமிழகத்தில் பேருந்துகள் மிக குறைவாகவே இயக்கப்படுகின்றன.
எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவாக வேலைநிறுத்தம் செய்ய போவதாக சில தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில், ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வர போக்குவரத்துத்துறை உத்தரவுவிட்டுள்ளது. அப்படி மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தை கண்டித்து கர்நாடகாவிலும் பந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதால், தமிழக, கர்நாடக மாநில எல்லையில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இன்று முழு அடைப்பையொட்டி தமிழகத்தில் இருந்து பெங்களூரு செல்லும் பஸ்கள் ஓசூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதே போல் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் பஸ்கள் அத்திப்பள்ளியில் நிறுத்தப்பட்டுள்ளன.
காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழக அரசியல் கட்சிகள் முற்றும் வணிக சங்கங்கள் நடத்தி வரும் பந்தினை முன்னிட்டு ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். சென்னையில் சுமார் 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.