ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே அரசு பள்ளி ஒன்றில் ஒழுங்காக பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டித்து பெற்றோர்ர்கள் மற்றும் மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே அத்திகுளத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு 30-க்கு மேற்ப்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 ஆசிரியர்கள் உள்ளனர்.


பள்ளியின் வேலைநேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையாகும். ஆனால் ஆசிரியர்கள் பள்ளிக்கு உரிய நேரத்துக்கு வருவதில்லையாம். 


இதனால் மாணவர்கள் தங்கள் பெற்றோரிடத்தில் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, தகவலறிந்த பெற்றோர்களும் ஆசிரியர்களிடம் பலமுறை சென்று உரிய நேரத்துக்கு பணிக்கு வருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். இதனை கண்டு கொள்ளத ஆசிரியர்கள் பள்ளிக்கு தாமதமாகவே வந்துள்ளனர்.


இந்த நிலையில், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உரிய நேரத்துக்கு பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டித்து நேற்று பள்ளியை இழுத்து மூடி பூட்டுப்போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.


இதுகுறித்து தகவலறிந்த திருவில்லிபுத்தூர் தாசில்தார் ராமநாதன், துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா, ஆய்வாளர் ஜஸ்டின் பிரபாகரன், கூடுதல் உதவித் தொடக்க கல்வி அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர் அங்கு வந்து திரண்டு இருந்தோரிடம் சுமார் மூன்று மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.


இதனையடுத்து தலைமை ஆசிரியை உள்பட மூவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து பணியிட மாறுதல் செய்ய ஆட்சியருக்கு அறிக்கை அனுப்புவதாக தாசில்தார் ராமநாதன் மற்றும் கல்வித் துறை அலுவலர்கள் உறுதியளித்துள்ளார்.