மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் குட் நியூஸ்! வருகிறதா 8வது ஊதியக்குழு?
மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இந்த பட்ஜெட்டில் தங்களுக்கான முக்கிய அறிவிப்புகள் வரும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது.
குறிப்பாக, 8வது ஊதியக்குழு குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என நம்பப்படுகின்றது. வழக்கத்தை போலவே இந்த ஆண்டும் பிப்ரவரி 1, 2025 அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எத்ரிபார்க்கப்படுகின்றது. இதில் வரும் அறிவிப்புகளுக்காக சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும் 67 லட்சம் ஓய்வூதியதாரர்களும் காத்திருக்கிறார்கள்.
சமீபத்தில், பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் 8வது சம்பளக் கமிஷன் பற்றிய பேச்சு முக்கியமாக எழுப்பப்பட்டது. இந்திய தொழிற்சங்க மையத்தின் (CITU) தேசிய செயலாளர் சுதேஷ் தேவ் ராய், இந்தப் பிரச்சினையை எழுப்பி, தற்போதைய 7வது ஊதியக் குழு செயல்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் ஆகின்றன என்றார். ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2016 இல் செயல்படுத்தப்பட்டன. அதன் காலம் 2025 இல் முடிவடைகிறது. இத்தகைய சூழ்நிலையில், 8வது சம்பளக் குழுவை அமைப்பது கட்டாயமாகிவிட்டது.
ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் படிகளை மேம்படுத்த, சம்பள ஆணையத்தை சரியான நேரத்தில் அமைப்பது அவசியம் என்று தொழிற்சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தினர். 8வது ஊதியக்குழு 2026 முதல் நடைமுறைக்கு வர வேண்டும். இதன் பரிந்துரைகளின் தாக்கம் லட்சக்கணக்கான ஊழியர்களை பாதிக்கும்.
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகளை மதிப்பாய்வு செய்து திருத்தியமைக்க ஊதியக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. 1986 ஆம் ஆண்டு நான்காவது சம்பளக் குழு அமைக்கப்பட்டது. அதிலிருந்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் 2016 இல் செயல்படுத்தப்பட்டன. இதன் கால அளவு 2025 இல் முடிவடைந்த பிறகு, புதிய ஆணையத்திற்கான தேவை இருக்கும்.
இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி NC-JCM டிசம்பர் 2024 இல் மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதியது. செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா தனது கடிதத்தில், தற்போதுள்ள 10 ஆண்டு சுழற்சியின் அடிப்படையில் 8வது சம்பளக் குழுவை உருவாக்குவது கட்டாயமாகும் என்று கூறியுள்ளார்.
பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் தொழிற்சங்கங்கள் இன்னும் பல முக்கியப் பிரச்சினைகளையும் எழுப்பின. அவற்றில் முக்கியமானது EPFO குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை ரூ.1,000 லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்த வேண்டும் என்பதாகும்.
வருமான வரி விலக்கு வரம்பை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும் என்டும் ஓய்வூதிய வருமானத்தில் வரி விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
கிக் தொழிலாளர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு சிறப்பு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய ஓய்வூதிய முறையை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என அரசு ஊழியர்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பணக்காரர்கள் மீது அதிக வரிகளை விதிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. முறைசாரா தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பிற்கு நிதியளிக்க பணக்காரர்களுக்கு கூடுதலாக 2% வரி விதிக்குமாறு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.