Amazon பார்சலில் சோனி ஹெட்போனுக்கு பதிலாக வந்த டூத்பேஸ்ட்..! 20 ஆயிரம் காலி
Amazon Wrong Product Delivery: அமேசான் மற்றும் பிளிப்கார்ட் உள்ளிட்ட தளங்களில் ஆன்லைன் ஆர்டர் செய்வது என்பது இப்போது பரவலாகிவிட்டது. சோப்பு முதல் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வரை அனைத்தும் அமேசான் போன்ற தளங்களிலேயே ஆர்டர் செய்து மக்கள் வாங்கிக் கொள்கின்றனர்.
கடைகளுக்கு சென்று பொருட்களை தேடி அலைந்து வாங்குவதை காட்டிலும் மிக எளிமையாக வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் சரியான பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்வது என்பது ஆன்லைன் ஷாப்பிங்கில் இருக்கும் வசதி.
ஆனால் இதில் இருக்கும் மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால் ஆர்டர் செய்த பொருளுக்கு மாற்றாக வேறொரு பொருள் அனுப்பி வைக்கப்படுவது ஆன்லைன் ஷாப்பிங் மீதான நம்பகத் தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது. சமீபத்தில் ஒரு பயனருக்கு ஆர்டர் செய்த சோனி ஹெட்ஃபோனுக்கு பதிலாக டூத்பேஸ்ட் பார்சலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனை பார்த்து அந்த வாடிக்கையாளர் கடும் அதிர்ச்சியடைந்தார். 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சோனி ஹெட்போனை ஆர்டர் செய்து காத்திருந்தவருக்கு பார்சலில் டூத்பேஸ்ட் இருந்தால் எப்படி இருக்கும்? என யோசித்து பாருங்கள்.
இதனை முழுமையாக வீடியோவாக அவர் பதிவு செய்து எக்ஸ் தளத்தில் பதிவேற்றியிருக்கிறார் அவர். அந்த வீடியோவில் பார்சல் வந்ததும் மகிழ்ச்சியாக எடுத்துச் செல்லும் அவர் பின் பிரிக்கிறார்.
முழுமையாக பார்சலை பிரித்து பார்க்கும்போது டூத்பேஸ்ட் இருக்கிறது. இதனை அவரால் நம்பவே முடியவில்லை. உண்மையில், அவர் அமேசானிலிருந்து ரூ.19,990 மதிப்புள்ள Sony XB910N வயர்லெஸ் ஹெட்ஃபோனை ஆர்டர் செய்திருக்கிறார்.
இது குறித்து அமேசான் தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கத்தில் தங்கள் தரப்பில் எந்த தவறும் நடக்கவில்லை என்றும், சரியான பொருளையே பார்சலில் அனுப்பி வைத்ததாகவும் விளக்கம் அளித்திருக்கிறது. இருப்பினும் பிரச்சனை தீர்க்கப்படும் வரை காத்திருக்குமாறு அமேசான் ஹெல்ப் கூறியிருக்கிறது.
அமேசானில் இதுபோன்ற தவறுகள் இதற்கு முன்பும் நடத்திருக்கின்றன. ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான டிவியை ஆர்டர் செய்தவருக்கு வேறொரு பிராண்ட் டிவி சென்றது. இந்த சம்பவங்கள் எல்லாம் ஆன்லைன் ஷாப்பிங் மீதான நம்பகத் தன்மையை மக்களிடையே கேள்விக்குள்ளாக்கின்றன.