5 நிமிடங்களில் வாக்காளர் அடையாள அட்டை..! ஆன்லைனில் இலவசமாக விண்ணப்பிக்கலாம்
இந்தியாவைப் பொறுத்தவரை 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவரும் வாக்களிக்க உரிமை பெற்றவர்கள். அத்துடன் இது இந்திய குடியுரிமை சான்றாகவும் உள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில் 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வீட்டில் இருந்தபடியே வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதனை பெற முடியும்.
வாக்காளர் அடையாள அட்டை உங்களுக்கு வேண்டும் என்றால் அல்லது ஏற்கனவே உள்ள வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் திருத்தம் செய்ய விரும்பினால், இதை வீட்டிலேயே எளிதாகச் செய்யலாம். ஆன்லைனில் முற்றிலும் இலவசமாக இதனை செய்ய முடியும். இப்போது வெறும் 5 நிமிடங்களில் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்வோம்.
வாக்காளர் அடையாள அட்டை அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://voters.eci.gov.in க்குச் செல்ல வேண்டும். அங்கு உங்களுக்கு என்ற பிரத்யேகமான கணக்கு ஒன்றை உருவாக்கி உங்கள் தொலைபேசி எண் மற்றும் அதில் அனுப்பப்பட்ட ஒரு முறை கடவுச்சொல் (OTP) உதவியுடன் Login செய்ய வேண்டும்.
இப்போது மேல் இடதுபுறத்தில் தெரியும் 'Register as New Voter - Form 6' என்ற ஆப்சனில் கிளிக் செய்யவும். இப்போது ஓபனாகியிருக்கும் படிவத்தில் தேவையான தகவலை உள்ளிட்டு, புகைப்படத்தை பதிவேற்றிய பிறகு, வீட்டில் உள்ள ஒருவரின் வாக்காளர் அட்டை எண்ணை உள்ளிடவும். ஆதார் அட்டையை முகவரி சான்றாக பதிவேற்ற வேண்டும்.
இறுதியாக, அனைத்து தகவல்களையும் சரியாக சரிபார்த்த பிறகு, படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். இப்போது நீங்கள் ஒரு விண்ணப்ப ஐடியைப் பெறுவீர்கள். அந்த ஐடியை குறித்து வைத்துக் கொண்டீர்கள் என்றால் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை குறித்த அப்டேட்டை தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பித்து சுமார் ஒரு வாரத்திற்குப் பிறகு, இந்த இணையதளத்தில் விண்ணப்ப ஐடியின் உதவியுடன் அதன் நிலையைச் சரிபார்க்கவும். கார்டு தயாராக இருந்தால், அதையும் பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் வாக்காளர் அட்டையும் சில நாட்களில் வீட்டு முகவரிக்கு டெலிவரி செய்யப்படும்.