விஜய் பிறந்தநாளில் பார்க்க வேண்டிய சிறந்த 8 காதல் படங்கள்!
பூவே உனக்காக: விஜயை பட்டித்தொட்டி எங்கும் கொண்டுசென்ற படம் என்றால் அது 'பூவே உனக்காக' தான். இயக்குநர் விக்ரமன் இயக்கிய இந்த படத்தில் விஜய் ராஜா என்ற பாத்திரத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். ராஜா தனது காதலுக்காக செய்யும் தியாகத்தையும், அதனால் ராஜா தாங்கிக்கொள்ளும் வலியையும் கச்சிதமாக விஜய் வெளிக்காட்டிருயிருப்பார். அதுவும் படத்தின் கிளைமேக்ஸில் பழனி பாரதி வரிகளில் வரும் ஆனந்தம் ஆனந்தம் பாடும் பாடலை நிச்சயம் யாராலும் மறக்கவே முடியாது.
காதலுக்கு மரியாதை: விஜய்யின் திரை வாழ்வில் ஒரு முக்கிய மைல்கல் என இந்த படத்தை சொல்லலாம். மிகவும் அமைதியான மற்றும் வழக்கத்திற்கு மாறான விஜயை இந்த படத்தில் நீங்கள் பார்க்கலாம். ஷாலினி உடனான அவரின் காதல் காட்சிகள் இன்றளவும் இளசுகளுக்கு இஷ்டமானவைதான். மலையாள இயக்குநர் ஃபாசில் இதனை இயக்கினார். இதன்பின்னர், விஜய்யின் நடிப்பு திறனும் ஒருப்படி மேலே சென்றது எனலாம்.
துள்ளாத மனமும் துள்ளும்: ஏறத்தாழ காதலுக்கு மரியாதை 'ஜீவா' போன்று அமைதியான கதாபாத்திரம்தான் என்றாலும், இதில் 'குட்டி' கதாபாத்திரத்தில் அதைவிட கூடுதல் வேறுபாட்டை காட்டியிருப்பார். கண்டுகொள்ளப்படாத ஒரு சிறிய பாடகனாக, ருக்குவை ஒருதலைப்பட்சமாக நேசிக்கும் ஒரு காதலனாக, ருக்குவின் கண்பார்வைக்கும் கல்விக்கும் கடினமாக உழைக்கும் ஒரு மனிதனாக, வறுமையில் வாடும் தாயாருக்கு ஒரு சிறந்த மகனாக என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் நடிகர் விஜய்.
மின்சார கண்ணா: கேஎஸ் ரவிக்குமாரின் இந்த திரைப்படம் இன்றும் தொலைக்காட்சியில் மக்களால் விரும்பிப் பார்க்கப்படும் திரைப்படமாகும். மின்சார கண்ணா திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவையே அந்த படத்தை இவ்வளவு காலம் கொண்டாடுவதற்கான காரணம் என்றாலும் விஜய் இந்த படத்திலும் ஒரு தனித்துவமான கதாபாத்திரத்தை கணகச்சிதமாக செய்திருப்பார்.
குஷி: எஸ்.ஜே. சூர்யா இயக்கிய 'குஷி' 2K கிட்ஸ் வரை கொண்டாடும் திரைப்படமாக இது அமைந்துவிட்டது. இந்த படத்தை எப்போது கில்லி போல் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்வார்கள் என பலரும் காத்திருக்கின்றனர். சிவா கதாபாத்திரத்தில் விஜய் செய்யும் குறும்புகளும், காதல் சேட்டைகளும் படத்தை வேறு தளத்திற்கு கொண்டுசென்றது. ஜோதிகா உடனான அந்த கெமிஸ்ட்ரி இந்த படத்தில் நேர்த்தியாக பொருந்தியிருந்தது. ஜாலியான, மிடுக்கான, குஷியான விஜயை நீங்கள் இதில் காண்பீர்கள்...
சச்சின்: விஜய்க்கு அவரது திரைவாழ்வில் நீண்ட கழித்து வந்த ஒரு காதல் திரைப்படம் எனலாம். இதிலும் சூழல் வேறு, கதாபாத்திரம் வேறு... இதிலும் வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்டியிருப்பார் விஜய். சச்சினாக துடிப்பான இளைஞன் கதாபாத்திரத்தில் ஷாலினியாக நடித்த ஜெனிலியாவிடம் இவர் செய்யும் அட்டகாசத்தை யாரால் மறக்க முடியும். படம் முழுக்க பனியும், புகையும் என ஒரு கூலான விஜயை இதில் நீங்கள் காண்பீர்கள்.
ஷாஜஹான்: இது காதல் படமா என்று நீங்கள் கேட்கலாம். காதல் திருமணம் வரை சென்று, கதாநாயகி உடன் நாயகன் சேர்ந்தால்தான் காதலா என்ன... அசோக் கதாபாத்திரம் விஜயை தவிர வேறு யாருக்கு பொருந்தியிருக்கும். அதுவும் கிளைமேக்ஸிற்கு முன் ரிஜிஸ்டர் ஆபீஸில், தனது காதலியை, தன் உயிர் நண்பன் அதுவும் தனது தலைமையிலேயே திருமண செய்துகொள்ளும்போது, கண்ணீருடன் சாட்சிக் கையெழுத்து போடும் ஒரு காட்சியே போதும் விஜய்யின் நடிப்பாற்றலை பற்றிச் சொல்ல...
வசீகரா: இந்த படத்தை பார்க்க தொடங்கிவிட்டால் நீங்கள் இதனை முடிக்காமல் விடுமாட்டீர்கள். அந்தளவிற்கு சுவாரஸ்யமான திரைக்கதை கொண்ட காமெடி - காதல் - ஊடல் கொண்ட பக்கா கமர்ஷியல் படம். விஜய் திரைவாழ்வில் நிச்சயம் யாரும் பூபதியையும் தவிர்த்துவிட முடியாது, பொம்முவையும் மறந்துவிட முடியாது.