CSK: சிஎஸ்கே குறிவைக்கும் இந்த 3 ஸ்பின்னர்கள்... மீண்டும் கோப்பையை வெல்ல பெஸ்ட் பிளான்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) என்றாலே அந்த அணி சுழற்பந்துவீச்சுக்கு பெயர் பெற்றது. சேப்பாக்கத்தில் சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து எதிரணியை திணறடிப்பதில் கேப்டன் தோனிக்கு இணை தோனிதான்.
அந்த வகையில், ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்ஸியை கைப்பற்றினாலும் சிஎஸ்கே மீண்டும் தோனி (MS Dhoni) பாணிக்குதான் திரும்பும் என கூறப்படுகிறது. கடந்த சீசனில் ருதுராஜ் கேப்டன்ஸியில் வைக்கப்பட்ட முக்கிய குற்றச்சாட்டே அவர் ஸ்பின்னர்களை முறையாக பயன்படுத்தவில்லை என்பதுதான்.
எனவே, இந்த முறை சுழற்பந்துவீச்சை பலமாக்கிக்கொள்வது மூலம் சேப்பாக்கத்தில் மட்டுமின்றி மற்ற மைதானங்களிலும் அசைக்க முடியாத அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி உருவெடுக்க வாய்ப்புள்ளது.
இதற்காக வரும் மெகா ஏலத்தை முன்னிட்டு தீக்ஷனா, மொயின் அலி, சான்ட்னர் உள்ளிட்டோரை சிஎஸ்கே விடுவிக்கும்பட்சத்தில் புதிய சுழற்பந்துவீச்சு யூனிட்டை கட்டமைக்க சிஎஸ்கே நினைக்கும்
இந்நிலையில், வரும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் (IPL 2025 Mega Auction) இந்த மூன்று சுழற்பந்துவீச்சாளர்களை எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் முயற்சிக்கும். அவர்கள் குறித்து இங்கு காணலாம்.
சிக்கந்தர் ராஸா: பஞ்சாப் கிங்ஸ் அணி இவரை தக்கவைப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவுதான். மிஸ்டரி ஸ்பின்னராக அறியப்படும் ராஸாவை (Sikandar Raza) ஏலத்தில் தூக்குவதற்கு சிஎஸ்கே அதிக ஆர்வம் காட்டும். ராஸா பேட்டிங்கிலும் அவ்வப்போது கைக்கொடுப்பார். தீக்ஷனாவை விடுவித்துவிட்டால் நிச்சயம் ஐபிஎல் ஏலத்தில் ஒரு மிஸ்ட்ரி ஸ்பின்னரை சிஎஸ்கே எடுக்க நினைக்கும்.
ரவிசந்திரன் அஸ்வின்: கிரிக்கெட் உலகுக்கு அஸ்வினை அடையாளம் காட்டியது சிஎஸ்கே. அதுமட்டுமின்றி 2016, 2017இல் தோனி இருந்த அதே ரைஸ்ஸிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியிலேயே அஸ்வின் தொடர்ந்தார். ஆனால், 2018இல் சிஎஸ்கேவால் அஸ்வினை (Ravichandran Ashwin) ஏலத்தில் எடுக்க முடியவில்லை. அதன்பின் பஞ்சாப், டெல்லி ஆகிய அணிகளுக்கு மாறிய அஸ்வின் தற்போது ராஜஸ்தானில் உள்ளார். எனவே, இந்த முறை மெகா ஏலத்தில் அஸ்வின் வந்தால் சிஎஸ்கே அவரை தயங்காமல் தூக்கும். அஸ்வின் இப்போது பேட்டிங்கிலும் சிறப்பான பங்களிப்பை அளிக்கிறார்.
எம். சித்தார்த்: இடதுகை சுழற்பந்துவீச்சாளராக ஜடேஜா இருந்தாலும், பவர்பிளேவில் ஒரு ஸ்பின்னர் சிஎஸ்கேவுக்கு தேவைப்படலாம். அந்த வகையில், எல்எஸ்ஜியில் இருக்கும் தமிழக வீரரான எம்.சித்தார்த்தை (M Siddharth) ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே முயற்சிக்கும். சாய் கிஷோரும் இந்த வேட்டையில் இருப்பார். இருப்பினும் எம். சித்தார்த்தின் வேரியேஷன் சாய் கிஷோரிடம் இல்லை என்பதால் சித்தார்த்தே இங்கு முன்னிலை பெறுகிறார்.