அஸ்வினும், ஆண்டரசனும் ஒரே நாளில் செய்த சாதனைகள்... 147 வருட டெஸ்ட் வரலாற்றில் முதல்முறை!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. 5ஆவது மற்றும் கடைசி போட்டியை இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த தொடர் இந்தியாவுக்கு பல சிறப்பான புதிய வீரர்களை கொடுத்துள்ளது எனலாம். குறிப்பாக, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரேல், ஆகாஷ் தீப், தேவ்தத் படிக்கல் ஆகியோரை கூறலாம். கடைசி போட்டியின் ஆட்டநாயகனாக குல்தீப் யாதவ் தேர்வான நிலையில், தொடர் நாயகனாக ஜெய்ஸ்வால் தேர்வானார்.
கடைசி ஐந்தாவது போட்டியில் அஸ்வின் மற்றும் ஆண்டர்சன் ஆகிய இருவரும் இருவேறு சாதனைகளை படைத்தனர். இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது 700ஆவது விக்கெட்டை இன்று கைப்பற்றினார். 147 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் வேறு எந்த வேகப்பந்துவீச்சாளரும் இதனை செய்யவில்லை, இந்த சாதனையை செய்யும் முதல் வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன்தான்.
இதற்கு முன் இரண்டு பேர் மட்டுமே சர்வதேச அளவில் 700 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். அதை செய்த இலங்கை வீரர் முரளிதரண் (800 விக்கெட்டுகள்), ஷேன் வார்னே (708 விக்கெட்டுகள்) ஆகிய இருவரும் சுழற்பந்துவீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், இந்திய வீரர் ரவிசந்திரன் அஸ்வினுக்கு இது 100ஆவது போட்டியாகும். இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழத்திய அஸ்வின், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை சாய்த்து அதிரடி காட்டினார்.
இதன்மூலம், 36ஆவது முறையாக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றும் அஸ்வின், இந்திய வீரர்களில் அதிக Fifer எடுத்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். சர்வதேச அளவில் மூன்றாமிடம் ஆகும். ஆனால், இதுவல்ல அவரது வரலாற்று சிறப்புமிக்க சாதனை. அதனை அடுத்த பக்கத்தில் காணலாம்.
அஸ்வின் 2013ஆம் ஆண்டில் டெல்லியில் நடைபெற்ற அவரது அறிமுக டெஸ்டிலும் 6 விக்கெட்டை கைப்பற்றியிருந்தார். அதன்பின், தற்போது 100ஆவது டெஸ்டிலும் 5 விக்கெட்டை கைப்பற்றி உள்ளார். அதன்மூலம், டெஸ்ட் அரங்கில் அறிமுக போட்டியிலும், 100ஆவது போட்டியிலும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியவர்கள் யாருமில்லை, இந்நிலையில், அஸ்வின் அந்த சாதனையை இன்று படைத்துள்ளார். அதாவது, 147 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் அறிமுக போட்டியிலும், 100ஆவது போட்டியிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர் அஸ்வின்தான்.