திருப்பதி லட்டில் குட்கா பாக்கெட், சிகரெட் துண்டு... அடுத்தடுத்து சர்ச்சை; அதிர்ச்சியில் பக்தர்கள்
)
கடந்த வாரத்தில் இருந்து எங்கு திரும்பினாலும் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தை பற்றிதான் பேச்சு... சமூக வலைதளங்களிலும் அதுதான் தொடர்ந்து டிரெண்டிங்...
)
திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு பிரசாத்தை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு மீன் எண்ணெய் ஆகியவை கலந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்தது.
)
இப்பிரச்சனை ஆன்மீக நாட்டம் கொண்டவர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழுவையும் அமைத்துள்ளது.
தற்போது திருப்பதி வெங்கடாசலபதி கோயில் லட்டு பிரசாதத்தை தயாரிக்க தேவையான நெய்யை கர்நாடகா அரசு நிறுவனமான நந்தினி நிறுவனத்திடம் இருந்து திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) நிர்வாகம் கொள்முதல் வருகிறது.
முன்னதாக மாமிச கொழுப்புகள் சேர்க்கப்பட்ட லட்டு தயாரிக்கப்பட்ட இடங்களிலும், லட்டு விற்பனை செய்யும் பகுதி உள்ளிட்ட கோவிலின் சில பகுதிகளிலும் தோஷத்தை நீக்கி புனிதப்படுத்தப்படும் சாந்தி ஹோமம் இன்று நடைபெற்றது.
இதனால் கோயில் மீண்டும் சுத்தமாகிவிட்டதாக கூறிய அர்ச்சகர்கள், பக்தர்களை கோயிலுக்கு தயங்காமல் வரும்படி அழைப்புவிடுத்திருந்தனர். இந்நிலையில், திருப்பதி லட்டு தற்போது அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளது.
தெலுங்கானா கம்மம் மாவட்டத்தை சேர்ந்த டோந்து பத்மாவதி என்பவர் சமீபத்தில் தனது உறவினர்களுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்து லட்டு பிரசாதத்தை வாங்கி உள்ளார்.
அவருக்கு விநியோகிக்கப்பட்ட லட்டு பிரசாதத்தை திறந்து பார்த்தபோது, லட்டு ஒன்றில் குட்கா பாக்கெட் மற்றும் சிகரெட் துண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தற்போது இந்த விவகாரம் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.