இந்திய அணியின் எதிர்காலம் இவர்கள்தான்... U19 உலகக்கோப்பையில் ஜொலித்தவர்கள் - ஒரு பார்வை
தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் முதல் நடைபெற்ற 19 வயதுக்குடப்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்திய அணி 9ஆவது முறையாக கோப்பையை இறுதிப்போட்டிக்கு சென்றது. ஏற்கெனவே, 5 முறை கோப்பையை வென்றிருந்த நிலையில், இந்த தோல்வி மூலம் நான்காவது முறையாக 2ஆவது இடத்தை பிடித்துள்ளது. அந்த வகையில், இந்த தொடரில் வருங்கால இந்திய அணியில் விளையாடக்கூடிய அளவில் நம்பிக்கை அளித்த 5 வீரர்கள் குறித்து இதில் காணலாம்.
கேப்டன் உதய் சஹாரன்: 2008இல் விராட் கோலிக்கு பின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் நம்பிக்கை அளிக்கக் கூடிய கேப்டனாக உதய் சஹாரான் இருக்கிறார். பேட்டிங்கிலும் இவர் நம்பிக்கை அளிக்கக்கூடியவராக திகழ்கிறார்.
அர்ஷின் குல்கர்னி: ஹர்திக் பாண்டியாவுக்கு பின் வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் யாருமே இல்லை என்ற கவலைக்கு அர்ஷின் குல்கர்னியால் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என கூறப்படுகிறது. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் இவர் கலக்கி உள்ளார். இவர் வரும் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
அவினாஷ் ஆரவல்லி ராவ்: ஏற்கெனவே, லிஸ்ட் ஏ போட்டிகளில் இவர் அறிமுகமாகிவிட்ட நிலையிஸ், இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய விக்கெட் கீப்பிங் பேட்டராக திகழ்கிறார். நடந்து முடிந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இவரின் அதிரடி இன்னிங்ஸ்கள் வெற்றிக்கு வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது.
சௌமி பாண்டே: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் 7 இன்னிங்ஸில் சுழற்பந்துவீச்சாளரான சௌமி பாண்டே 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த தொடர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2ஆவது வீரர் என்ற பெருமையை பெற்ற பாண்டே, இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை U19 உலகக் கோப்பையில் கைப்பற்றியவராகவும் உருவெடுத்தார்.
முஷீர் கான்: ஆறு போட்டிகளில் 360 ரன்களை குவித்தார், முஷீர் கான். இதில் இரண்டு சதங்கள். குறிப்பாக இவரது சராசரி 60 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 98.09 ஆகவும் உள்ளது. ஷிகர் தவாண் 3 முறை U19 உலகக் கோப்பை தொடரில் சதம் அடித்த நிலையில், அவருக்கு பின் அதிக சதங்கள் அடித்தவர் இவர்தான். மேலும், இதில் சச்சின் தாஸையும் சேர்க்கலாம்.