ஏழை, நடுத்தர மக்களுக்கு மலிவு விலையில் வீடு கட்டித் தர... ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு ..!!
மத்திய அரசு அனைவருக்கும் வீட்டுவசதி அளிக்கும் நோக்கில், துவங்கப்பட்டது தான், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டமாகும். நகர் புற, கிராமப்புற ஏழை மக்களின் வாழ்க்கைத்தரத்தை மாற்றும் வகையில், அவர்களுக்கு உறுதியான வீடுகளை கட்டி தருவதாக உத்தரவாதம் அளித்த பாஜக, அதனை நிறைவேற்றும் நோக்கில் இந்த திட்டத்தை கொண்டுவந்தது.
நகர்ப்புறம், கிராமப்புறம் என்று 2 பகுதிகளாக பிரிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், வீடு கட்டுவதற்கு பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. குறிப்பாக எஸ்சி/எஸ்டி அல்லது சிறுபான்மை சமுதாயத்தினருக்கு மானியம் பெருமளவு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் கடனை திருப்பி செலுத்தவும் 20 வருடம் அவகாசம் உள்ளதுடன், வட்டி விகிதமும் மிகவும் குறைவு.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, அனைவருக்கும் வீடு என்ற நோக்கத்தில் பிரதமர் ஆவாஸ் யோஜனா-நகர்ப்புற 2.0 திட்டத்தை அறிவித்தார். நகர்ப்புற 2.0 திட்டத்தின் கீழ், 1 கோடி ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் வீடு வழங்க 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அறிவித்துள்ளார்.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நாட்டில் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் 3 கோடி கூடுதல் வீடுகள் கட்டி தருவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையின் போது கூறினார்.
பாஜகவின் முதல் பதவி காலத்தில், 2015ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், 2022ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த இலக்கை அரசாங்கம் இன்னும் அடையவில்லை.
கிராமப்புற குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கி, 2024 மார்ச் மாதத்திற்குள் 2.95 கோடி வீடுகள் கட்டுவதை இலக்காகக் கொண்டு, 2016-ஆம் ஆண்டில் PMAY - கிராமின் (PMAY-G) திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
PMAY-கிராமின் திட்டத்தின் கீழ் 2024 பிப்ரவரி மாதம் வரை, 2.94 கோடி வீடுகளுக்கு அனுமதி அளித்துள்ளதாகவும், அதில் 2.55 கோடி வீடுகள் 2024 பிப்ரவரி மாதத்திற்கு கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன
பொது-தனியார் கூட்டாண்மை (பிபிபி) மாடலின்ன் மூலம் தொழில்துறை தொழிலாளர்களுக்கான தங்குமிட வசதியை ஏற்படுத்தி தர, வாடகை வீடுகளை கட்டு அமைத்து மேம்படுத்தவும் அரசு உதவி செய்யும் என்றும் நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.