Budget 2025: மூத்த குடிமக்களை மகிழ்விப்பாரா நிதி அமைச்சர்? இந்த முக்கிய அறிவிப்புகள் வரலாம்

Wed, 08 Jan 2025-7:48 am,

மூத்த குடிமக்களுக்கென சில குறிப்பிட்ட தேவைகள் இருக்கின்றன. இள வயதிலேயே இதற்கான திட்டமிடலை செய்வது அவசியம். அவர்களின் நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் வரி திட்டமிடல் இன்றியமையாத அங்கமாகிறது. அதிகரித்து வரும் மருத்துவ செலவுகள் மற்றும் பணவீக்கம் போன்ற காரணிகள் மூத்த குடிமக்களின் மாதாந்திர செலவுகளை அதிகரிக்கும். இவர்கள் ஓய்வூதிய சேமிப்பு அல்லது முதலீடுகளை மட்டுமே சார்ந்து இருப்பதால் அவர்களின் நிதி நலனைப் பாதுகாப்பது மிக அவசியமாகின்றது.

முதலீட்டு வருவாயை மேம்படுத்துதல், வரிச் சலுகைகளைப் பயன்படுத்துதல் மற்றும் பயனுள்ள நிர்வாக உத்திகளைச் செயல்படுத்துதல் ஆகியவை மூத்த குடிமக்கள் தங்கள் நிதிகளை நிர்வகிக்கும் போது எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களைத் தணிக்க உதவும். சமீபத்திய ஆண்டுகளில், வரி முறையை எளிதாக்குவதற்காக அரசாங்கம் பல முன்முயற்சிகளை எடுத்துள்ளது.

2025 பட்ஜெட்டில் மூத்த குடிமக்கள் தங்களின் தனித்துவமான நிதித் தேவைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் சீர்திருத்தங்களுக்காக காத்திருக்கிறார்கள். மூத்த குடிமக்கள் மன, உடல்நலம் மற்றும் நிதி சார்ந்த கவலைகளை அதிகம் எதிர்கொள்கின்றனர். பொது மக்களுக்காக பொதுவாக பயனர் நட்பு வரி முறையை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், மூத்த குடிமக்கள் தங்களுக்கான பிரத்யேக சீர்திருத்தங்களை கோருகின்றனர்.

பிப்ரவரி 1, 2025 அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அனைத்து பிரிவினரைப் போலவே மூத்த குடிமக்களும் இந்த பட்ஜெட்டில் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். பணவீக்கம் மற்றும் உடல்நலம் தொடர்பான செலவுகள் மூத்த குடிமக்களின் வாழ்க்கையை கடினமாக்கியுள்ளன. ஆகையால் இவற்றில் நிவாரணம் அளிக்கும் சில மாற்றங்களை நிதி அமைச்சர் எடுக்கலாம் என கூறப்படுகின்றது.

சொந்த வீடு இல்லாத முதியோர்கள் அதிக அளவில் உள்ளனர். இவர்கள் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். இவர்களில் சிலருக்கு வாடகை தொகையை கட்டுவது பெரும் சுமையாகவும் உள்ளது. வீட்டு வாடகைக்கு வரி விலக்கு வசதியை அரசு வழங்க வேண்டும் என மூத்த குடிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  குறிப்பாக வழக்கமான ஓய்வூதியம் பெறாதவர்களுக்கு இது மிக அவசியம். இது அவர்களுக்கு நிதி நிவாரணம் அளிக்கும், அவர்களின் வாழ்க்கையை சிறிது எளிதாக்கும்.

கரோனா தொற்றுக்குப் பிறகு, மருத்துவச் சேவைகளின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. மருத்துவக் காப்பீடு இல்லாமல் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவது கடினமாகி விட்டது. மூத்த குடிமக்கள் தற்போது ஹெல்த் பாலிசி பிரீமியத்தில் ரூ.50,000 வரி தள்ளுபடி பெறுகிறார்கள். இந்த வரம்பை குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். சுகாதார காப்பீட்டு பாலிசிகளின் பிரீமியம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இது அவசியமாகின்றது.

 

மூத்த குடிமக்களின் வரி சேமிப்பு கருவிகளில் லாக்-இன் காலத்தை குறைக்க அரசு பரிசீலிக்க வேண்டும் என கோரிக்கை உள்ளது. தற்போது, ​​ஒரு வங்கி அல்லது தபால் அலுவலக வரி சேமிப்பு FD இன் லாக்-இன் காலம் 5 ஆண்டுகளாக உள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் வரி சேமிப்பு திட்டங்களில் (ELSS) இது 3 ஆண்டுகளாக உள்ளது. மூத்த குடிமக்களுக்கு இந்தக் திட்டங்களின் லாக்-இன் காலத்தைக் குறைப்பது அவர்களின் நிதிச் சிக்கல்களைக் குறைக்கும்.

தற்போது, ​​வங்கிகள் அல்லது கூட்டுறவு சங்கங்களின் வைப்புத்தொகையின் மீதான வட்டி வருமானத்தில் ரூ.50,000 வரை வரி விலக்கு கிடைக்கிறது. இந்த வரம்பை அரசாங்கம் உயர்த்த வேண்டும் என்றும் தேசிய சேமிப்புச் சான்றிதழில் (NSC) கிடைக்கும் வட்டியையும் இந்த வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். 

கொரோனா காலத்திற்கு முன்னர் வரை, ரயில் டிக்கெட் விலையில் மூத்த குடிமக்களுக்கு தள்ளுபடி அளிக்கப்பட்டது. இது கோவிட் 19 தொற்றின்போது நிறுத்தப்பட்டது. இதை மீண்டும் அரசு கொண்டு வர வேண்டும் என மூத்த மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது மீண்டும் வந்தால், அது மூத்த குடிமக்களின் பயணச் செலவுகளை வெகுவாக குறைக்கும்.

இந்த பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கு அதிக வரி விலக்குகள் மற்றும் வரி சலுகைகளை அளித்து, அவர்களது வாழ்வை அரசாங்கம் எளிதாக்கும் என நம்பப்படுகின்றது. 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link