Budget 2025: புதிய வரி முறையில் வரி செலுத்துவோர் எதிர்பார்க்கும் முக்கிய மாற்றங்கள்

Wed, 29 Jan 2025-5:02 pm,
Union Budget 2025

பிப்ரவரி 1 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட் குறித்து நாட்டு மக்களுக்கு பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன.

Budget 2025 Expectations

வழக்கத்தை போலவே, வரி விதிப்பு முறையில் அரசாங்கம் மாற்றத்தை கொண்டு வரும் என்றும், வரிச்சலுகைகள் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கபடுகின்றது. குறிப்பாக, புதிய வரி முறையின் கீழ் வரி செலுத்துவோர் அதிக சலுகைகளை எதிர்பார்க்கிறார்கள்.

Taxpayers

வரி செலுத்துவோர், குறிப்பாக சம்பளம் வாங்கும் வர்க்கத்தினர், வரவிருக்கும் பட்ஜெட்டில் பல வரி மாற்றங்களை எதிர்பார்க்கின்றனர். இந்த மாற்றங்கள் மூலம் அவர்களது நிதிச் சுமையும் ஓரளவு குறையும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது. 2025 பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் தொடர்பாக வரி செலுத்துவோருக்கு இருக்கும் சில முக்கிய எதிர்பார்ப்புகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

சேமிப்பை ஊக்குவிக்கவும், வரி செலுத்துவோரை இதன் பக்கம் ஈர்க்கவும் புதிய வருமான வரி முறையின் கீழ் அரசாங்கம் வரிச் சலுகைகளை அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். ரூ.7 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள தனிநபர்கள் புதிய வரி முறையின் கீழ் வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். இந்த அடிப்படை விலக்கு வரம்பை அதிகரித்தும், வரி அடுக்குகளை மாற்றியும், நிலையான விலக்கு வரம்பை உயர்த்தியும் அரசாங்கம் புதிய வரி முறையை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கம் வரி இல்லாத ஆண்டு வருமான வரம்பை ரூ.10 லட்சமாக உயர்த்தக்கூடும் என்று பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அதிக வீட்டு வாடகை உட்பட வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருவதால், வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) விலக்கு அதிகரிக்கும் என்று வரி செலுத்துவோர் எதிர்பார்க்கின்றனர். HRA விலக்கின் வரம்பை இன்னும் அதிக நகரங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்றும், இதன் மூலம் இந்தப் பகுதிகளில் சம்பளம் பெறும் வரி செலுத்துவோருக்கு நிவாரணம் கிடைக்கும் என்றும் நிபுணர்கள் கருதுகிறார்கள். சம்பளம் பெறும் வரி செலுத்துவோர் புதிய வரி முறையின் கீழ் வாடகை செலவினங்களுக்கு HRA விலக்குகளைப் பெற அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

வீட்டுக் கடன்களுக்கான வரி விலக்குகளை அதிகரிக்கவும், மலிவு விலை வீடுகளுக்கு சிறந்த சலுகைகளை வழங்கவும் அரசு இந்த பட்ஜெட்டில் நடவடிக்கை எடுக்கும் என கூறப்படுகின்றது. வீட்டுவசதிப் பிரிவு புத்துயிர் பெற, அணுகலை விரிவுபடுத்தவும், அதிகரித்து வரும் நிலச் செலவுகளை நிவர்த்தி செய்யவும், மலிவு விலை வீட்டுக் கடன் தொகை வரம்பை ரூ.20 லட்சத்திலிருந்து உயர்த்துவது அவசியம் என்ற கருத்து உள்ளது. வீடு வாங்குபவர்களுக்கு, குறிப்பாக முதல் முறையாக வாங்குபவர்களுக்கு முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணங்களைக் குறைப்பது, வீட்டுக் கடன் வட்டி விகிதங்களைக் குறைப்பது ஆகியவை பலனளிக்கும்.

பழைய வரி முறையின் கீழ் (Old Tax Regime) கீழ் தற்போதைய ஸ்டாண்டர்ட் டிடக்ஷன், அதாவது நிலையான விலக்கு வரம்பு ரூ.50,000 ஆகவும், புதிய வரி முறையின் (New Tax Regime) அது ரூ.75,000 ஆகவும் உள்ளது. அதிகரித்து வரும் செலவுகளிலிருந்து நடுத்தர வர்க்கத்தினருக்கு பயனளிக்கும் வகையில் நிலையான விலக்குக்கான வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அடிப்படை விலக்கு வரம்பை அதிகரிப்பதன் மூலமும், வரி அடுக்குகளை சரிசெய்வதன் மூலமும், நிலையான விலக்கை உயர்த்துவதன் மூலமும் அரசாங்கம் புதிய வரி முறையை மேலும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட கால மூலதன ஆதாய வரியில் மாற்றங்கள் செய்யபப்ட வேண்டும். நீண்ட கால முதலீடுகளுக்குக் குறைக்கப்பட்ட விகிதங்கள் போன்ற அம்சங்களுடன் கூடிய சமமான மூலதன ஆதாய வரிக் கொள்கை தேவை, இது பட்டியலிடப்பட்ட பங்குகளை விற்கும் மக்கள் மீதான நிதி அழுத்தத்தைக் குறைக்கலாம். நீண்ட காலத்திற்கு பங்கு வைத்திருப்பவர்களுக்கான சலுகைகளும் பட்ஜெட்டில் சேர்க்கப்படலாம். இது நீண்ட கால மூலதனக் குவிப்பை ஊக்குவிக்கும்.

வரி செலுத்துவோரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா? புதிய வரி முறையில் அனுகூலமான மாற்றங்கள் ஏற்படுமா? பிப்ரவரி 1 ஆம் தேதி விடை கிடைக்கும்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link