பக்தி பாடல்களின் சிகரம்! குரலால் வாழ்ந்து கொண்டிருக்கும் சீர்காழி கோவிந்தராஜன்

Wed, 18 Jan 2023-4:34 pm,

சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் 1933ம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி நாகை மாவட்டம் சீர்காழியில் பிறந்தார்.

1953-ல் பொன்வயல் என்ற படத்தில் சுத்தானந்த பாரதியின் சிரிப்புத்தான் வருதையா என்ற பாடலை தன் வெண்கலக் குரலில் பாடி தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். 

 

இதற்கு முன்னரே ஒளவையார் திரைப்படத்துக்காக ஆத்திச்சூடி பாடியிருந்தார்.

 

சீர்காழியின் குரல் கோயில் மணியோசையின் கம்பீரத்தைக் கொண்டது. பூமி அதிர முழங்கும் போர் முரசைப் போன்று பேருண்மைகளையும் ஆழமான தத்துவங்களையும் அழுத்தமாக நம் மனதில் பதியவைக்கக்கூடியது. 

 

‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ என்னும் தத்துவப் பாடலையும், ‘மரணத்தைக் கண்டு கலங்கும் விஜயா’ என்று போதனை செய்யும் கிருஷ்ணனின் குரலையும், தமிழர்களின் காதுகளிலும் நினைவுகளிலும் அழியாத ஒலிச்சித்திரமாக்கியவர் சீர்காழி.

 

‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ என்று கர்ணனுக்காக உருகிய குரலும் அவருடையதுதான். 

 

கே.பி.சுந்தரம்பாளுக்கு அடுத்ததாக ஒலிபெருக்கியே தேவையில்லை என்று சொல்லத்தக்க குரல் வளம் சீர்காழியினுடையது. 

 

சங்கீத அகாடமி விருது, இசைப் பேரறிஞர் விருது, பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். தெய்வத் திருமணங்கள், அகத்தியர், ராஜராஜசோழன் உள்ளிட்ட பல படங்களில் தனது அபார நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தியுள்ளார்.

 

தன் இனிமையான குரலால் ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட சீர்காழி கோவிந்தராஜன் 55-வது வயதில் (1988) மறைந்தார்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link