Health News: தண்ணீர் குடிக்க கூட நேரம் காலம் பார்க்கணுமா?
உணவியல் நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங், "சிலர் தூங்குவதற்கு முன்பு அதிக அளவில் தண்ணீர் குடிக்கிறார்கள். இது அவர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. தூங்குவதற்கு சற்று முன்பு அதிக அளவில் தண்ணீர் குடிப்பதால் இரண்டு பிரச்சினைகள் ஏற்படும். முதலாவது, நீங்கள் தூக்கத்தின் நடுவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கக்கூடும். இதன் காரணமாக உங்கள் உறக்கம் சரியில்லாமல் போகலாம். மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல நேரம் எடுக்கலாம். இரண்டாவது பிரச்சனை என்னவென்றால், தூங்கும் போது, நாம் விழித்திருக்கும் நேரத்தை விட சிறுநீரகங்கள் மெதுவாக வேலை செய்கின்றன. இது உடலில் திரவத்தைத் தக்கவைத்து, மறுநாள் காலையில் முகம் மற்றும் மூட்டுகளில் வீக்கம் ஏற்படலாம்." என்று கூறுகிறார்.
தீவிர உடற்பயிற்சிகளின்போது அதிகம் வியர்ப்பதால் (கனமான மற்றும் வேகமான உடற்பயிற்சி) உங்களுக்கு மிகவும் தாகமாக இருக்கும். ஆனால் தீவிர உடற்பயிற்சியின் போது நீங்கள் அதிக அளவில் தண்ணீர் குடித்தால், அது உங்களுக்கு ஆபத்தானது. ஏனெனில், இப்படி செய்தால், உடற்பயிற்சிகளால் ஏற்படும் உடல் வெப்பநிலை திடீரென குறைந்து, உடலில் இருக்கும் சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகளின் அளவைக் குறைக்கும் வாய்ப்பு ஏற்படும். இதன் காரணமாக தலைவலி, தலைச்சுற்றல் போன்ற பிரச்சினைகள் வர வாய்ப்புண்டு.
டாக்டர் ரஞ்சனா சிங் கருத்துப்படி, நீங்கள் செயற்கை இனிப்புகளுடன் தண்ணீரை உட்கொண்டால், அது உங்கள் எடை இழப்பு செயல்முறையை கெடுத்துவிடும். செயற்கை சர்க்கரைகள் குறைந்த கலோரி கொண்ட உணவுகள் ஆகும். ஆனால் ஜூன் 2010 இல் என்.சி.பி.ஐ.யில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, இவற்றுடன் நீரை பருகினால், அது உங்கள் பசியை அதிகரித்து எடை அதிகரிப்புக்கு காரணமாகும்.
நீங்கள் கழிக்கும் சிறுநீரின் நிறம் அதிகமான வெள்ளை நிறத்தில் இருந்தால், அது உடலில் அதிக நீர் இருப்பதன் அறிகுறியாக இருக்கலாம். இது தேவையை விட அதிக அளவு தண்ணீர் குடிப்பதால் ஏற்படலாம். இது உடலில் சோடியம் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும். மேலும் இதனால் பிற உடல்நலப் பிரச்சினைகளும் வரக்கூடும்.
ஒவ்வொரு நபரும் ஒரு நாளில் 3 முதல் 4 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் கூறுகிறார். ஆனால் அதன் சரியான அளவு உங்கள் ஆரோக்கியத்தையும் பொறுத்தது. எனவே, உங்கள் உடலுக்கு தேவையான நீரின் அளவு என்ன என்பதை அறிந்துகொள்ள ஒரு நிபுணரை அணுகுவது சரியாக இருக்கும்.
இங்கே வழங்கப்பட்ட தகவல்கள் எந்தவொரு மருத்துவ ஆலோசனைல்க்கும் மாற்று இல்லை. இது கற்றறியும் நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.