நீரிழிவு நோய்க்கு வரப்பிரசாதமாகும் சஞ்சீவனி ‘இலைகள்’!
நீரிழிவு நோய் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தாமல் இருக்க அதனை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். சில இலைகளை மென்று சாப்பிட்டாலோ அல்லது வேறு எந்த வகையிலாவது உட்கொண்டாலோ, சர்க்கரை நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பெருமளவு குறைக்கலாம், அவற்றில் பயனுள்ள சில இலைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
மாம்பழத்தின் சுவை அனைவரையும் ஈர்க்கக் கூடியவை. ஆனால், நீரிழிவால் பாதிக்கப்பட்டால், அந்த பழத்தை உண்பதை தவிர்ப்பார்கள். ஆனால் அதன் இலைகள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மாவிலைகளில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் பெக்டின் ஆகியவை உள்ளன. இவை, சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும். மாவிலையை நன்றாக கழுவிய பின் மென்று சாப்பிடலாம் அல்லது இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்.
இரவில் தூங்கும் முன் கொய்யா இலைகளை மென்று சாப்பிடுவது அளப்பரிய பலன்களை தருவதோடு, காலையில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் வியக்கத்தக்க அளவில் கட்டுக்குள் வரும். கொய்யா பழத்தையும் நீரிழிவு நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம்.
சிறுகுறிஞ்சான் இலை சிறிதாகவும், முனை கூர்மையாகவும் மிளகாய் இலை போன்று காணப்படும். இது கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடங்களாக நீரிழிவு நோய்க்கு அருமருந்தாக இந்த மூலிகை உள்ளது. இது சர்க்கரை கொல்லி எனவும் அழைக்கப்படுகிறது.
முருங்கை கீரை நீரிழிவு நோயைக் சிறப்பாக கட்டுப்படுத்த உதவும். முருங்கை காய்கள், பூ மற்றும் இலைகளில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. இதனால் நீரிழிவு நோய்க்கு முருங்கை மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
வேப்பிலை மிகவும் கசப்பானது என்றாலும், சிறந்த ஆயுர்வேத மருந்து ஆகும். வேப்பிலைகளில் ஃபிளாவனாய்டுகளுடன், வைரஸ் எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன, இது நீரிழிவு நோயின் விளைவைக் குறைக்கிறது. சிலர் அதை மென்று சாப்பிடுவார்கள் அல்லது இலைகளை உலர்த்தி, அரைத்து பொடி வடிவில் மாற்றி வைத்துக் கொண்டு தண்ணீரில் கலந்து குடிப்பார்கள்.
கறிவேப்பிலை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளது. இது இன்சுலின் சுரப்பை தூண்டுவதன் மூலம் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும், கறிவேப்பிலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறிப்பாக அதிலுள்ள இரும்புச்சத்து ரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.