தொடர்ந்து அதிகரிக்கும் விவாகரத்துகள்... இந்த 5 விஷயங்களே முக்கிய காரணம்!
மேற்கத்திய நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே விவாகரத்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. நமது மக்கள்தொகை ஒருபுறம் இருந்தாலும், உங்கள் சுற்றத்திலும் கூட விவாகரத்து செய்திகளை நீங்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள். விவாகரத்து அதிகரித்துவிட்டது என சொல்வதற்கு தக்க ஆய்வுகள் ஏதும் இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அப்படியிருக்க, இந்திய சமூகத்தில் விவாகரத்து அதிகரித்திருப்பதற்கான 5 முக்கிய காரணங்களை இங்கு காணலாம்.
1. பெண்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வு: பெண் கல்வி என்பது ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது. இதனால், அவர்களின் வேலைவாய்ப்பும் அதிகரித்தும், அவர்களின் பொருளாதாரமும் உயர்ந்து அவர்கள் சுதந்திரமாக செயல்படுகிறார்கள். இது விவாகரத்து ஏற்பட முக்கிய காரணம் என்றால் யாரும் கோபப்படக்கூடாது. இது ஆரோக்கியமான விஷயம்தான். ஏனென்றால், முந்தைய காலகட்டங்களில் பெண்கள் சுதந்திரமாக செயல்பட முடியாததால்தான் அதிக விவாகரத்துகள் ஏற்படவில்லை. ஆண் - பெண் உறவில் இருக்கும் பிரச்னைகள் அப்போதும் இப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. ஆண்கள் மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிராக பெண்களிடம் எழுந்த சட்ட ரீதியான விழிப்புணர்வால் விவாகரத்து அதிகரித்திருக்கிறது.
2. மனநிலை மாற்றம்: விவாகரத்துக்கு பின் வாழ்க்கை இல்லை, விவாகரத்து என்பது அனைத்திற்கு முற்றுப்புள்ளி போன்ற சமூக மனநிலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மறுமணம் உள்ளிட்ட பல வாய்ப்புகள் பெண்களும் சரி, ஆண்களும் சரி இருப்பதால் விவகாரத்தை யாரும் தவறு என்று நினைக்கவில்லை.
3. காதல் திருமணங்களும் அதிகரிப்பு: முன்பு சொன்னது போல், குடும்பத்தினர் பார்த்து செய்து வைப்பதால் திருமணத்தை முறித்துக்கொள்வதில் தம்பதியருக்கு பெரும் தயக்கம் இருந்தது. ஆனால் தற்போது காதல் திருமணங்கள் அதிகரித்திருக்கும் இந்தச் சூழலில், தம்பதியர்கள் யாருக்காவதும் தயங்க வேண்டியதில்லை. தங்களுக்கு உறவில் அசௌகரியங்கள் நிலவினால் விவாகரத்து குறித்து முடிவெடுப்பது அவர்களின் கைகளிலேயே இருக்கிறது.
4. வாழ்க்கைமுறை மாற்றம்: தம்பதியர்கள் இருவருமே பணியில் இருக்கிறார்கள். அவர்களின் தொழில் ரீதியான வாழ்வில் எப்போதும் பிஸியாகவே இருக்கிறார்கள் எனும்போது உறவில் அதிக விரிசல் ஏற்படுகின்றன. எனவே, கணவன், மனைவிக்கு பரஸ்பரம் ஏற்படும் அன்யோன்யம் இல்லாமல் போய்விடுகிறது. தொழில் - இல்லறம் ஆகியவற்றை சரியாக நிர்வகிக்காவிட்டால் திருமண உறவு விவாகரத்துக்கு சென்றுவிடுகிறது.
5. ஈகோ பிரச்னை: திருமண உறவில் தம்பதியர் இருவருக்கும் நிலவும் ஈகோ பிரச்னைகளும் விவாகரத்திற்கான முக்கிய காரணம் எனலாம். இதில் பொருளாதாரம், வாழ்க்கைச்சூழல் உள்ளிட்ட பல விஷயங்களும் தாக்கம் செலுத்தும். இருப்பினும் இதுவும் முக்கிய காரணம் எனலாம்.
பொறுப்பு துறப்பு: இது பொதுவான தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதாகும். விவாகரத்து குறித்தோ, இந்த பிரச்னைகள் குறித்தோ சந்தேகங்கள் இருந்தால் வல்லுநர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளவும். இதற்கு Zee News பொறுப்பேற்காது.