EPF உறுப்பினர்களுக்கு முக்கிய அப்டேட்: பிஎஃப் கணக்கில் மாற்றங்கள் செய்ய புதிய விதிகள் அறிமுகம்

Sat, 03 Aug 2024-3:31 pm,

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, பிஎஃப் உறுப்பினர்களுக்கான (PF Members) விவரங்களை புதுப்பிப்பதற்கும் திருத்துவதற்கும் விதிகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. கணக்கு வைத்திருப்பவர்களின் பிஎஃப் கணக்குகளில் (PF Account) ஏதேனும் தவறுகள் இருந்தால் அதை எளிதாக சரிசெய்து, கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் விவரங்களை சரியான நேரத்தில் புதுப்பித்துக் கொள்ளவதற்கு போதுமான வசதியை ஏற்படுத்திக்கொடுப்பதே இந்த புதிய விதிகளின் நோக்கமாகும். 

இப்போது, ​​UAN ப்ரொஃபைலில் பெயர், பிறந்த தேதி அல்லது பிற தகவல்களில் ஏதேனும் திருத்தம் செய்ய, கணக்கு வைத்திருப்பவர் உறுதிப்பாட்டை அளிக்க தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் போன்றவற்றைச் இதற்கு சமர்ப்பிக்கலாம். இதன் மூலம் திருத்தப்பட்ட விவரம் உறுதிபடுத்தப்பட வேண்டும், அது பற்றிய தகவல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஊழியர்களின் பெயர், பிறந்த தேதி மற்றும் பிற சுயவிவரங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களைத் திருத்துவதற்கான புதிய நிலையான செயல்பாட்டு நடைமுறை (SOP) வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. இந்த SOP பதிப்பு 3.0 இன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், UAN Profile -இல் ஏதேனும் தவறுகள் இருந்தால் அது திருத்தப்பட்டு சரியான தகவல் புதுப்பிக்கப்படுவதை உறுதி செய்வதை இந்த திருத்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

EPFO தனது புதிய வழிகாட்டுதல்களில் பிஎஃப் சந்தாதாரர்கள் (PF Subscribers) தங்கள் ப்ரொஃபைலில் உள்ள தவறுகளைத் திருத்துவதில் அடிக்கடி சிரமங்களை எதிர்கொள்வதாகத் தெளிவாகக் கூறியுள்ளது. இந்த சிக்கல்கள் முக்கியமாக தரவு புதுப்பிக்கப்படாததாலோ அல்லது தவறான தகவல்களை உள்ளிடுவதாலோ உருவாகின்றன.

புதிய வழிகாட்டுதல்களின்படி, EPFO ​ப்ரொஃபைலில் செய்யப்பட்ட மாற்றங்களை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துள்ளது: மேஜர் மற்றும் மைனர், அதாவது பெரிய மற்றும் சிறிய மாற்றங்கள். இந்தப் புதிய வழிமுறைகள், கணக்கு வைத்திருக்கும் பிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் தகவல்களைப் புதுப்பித்த நிலையில் வைத்திருக்கும் செயல்முறையை மேலும் பாதுகாப்பானதாகவும் வெளிப்படையானதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெயரில் சிறிய தவறுகள், பிறந்த தேதியில் உள்ள சிறிய முரண்பாடுகள் போன்ற சிறிய மாற்றங்களை சரிசெய்ய, கணக்கு வைத்திருப்பவர்கள் கூட்டு அறிக்கை கோரிக்கையுடன்  (Joint Declaration Request) குறைந்தபட்சம் இரண்டு தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் அட்டை, பான் கார்டு அல்லது பிற அரசாங்க ஆவணங்களை இதற்கு சமர்ப்பிக்கலாம். இவை திருத்தத்தை உறுதிப்படுத்த போதுமானவை.

பிறந்த தேதியில் உள்ள பெரிய தவறுகள், தவறான பெயர் அல்லது வேறு ஏதேனும் பெரிய தவறு போன்ற பெரிய திருத்தங்களுக்கு, பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தது மூன்று தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். பெரிய திருத்தங்கள் செய்ய வேண்டுமானால், ஆவணங்களின் சரிபார்ப்பு இன்னும் கடுமையான முறையில் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இபிஎஃப் உறுப்பினர்கள் அனைவரும் தங்களது பிஎஃப் கணக்கில் ஒவ்வொரு மாதமும் தங்கள் ஊதியத்தில் 12% -ஐ டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கிறது. இபிஎஃப் கணக்கில் சேமிக்கப்படும் தொகை, ஊழியர்களின் எதிர்காலத்திற்கான மிகச் சிறந்த மற்றும் பாதுகாப்பான முதலீடாகவும் பார்க்கப்படுகின்றது.

இபிஎஃப் உறுப்பினர்களின் நன்மை மற்றும் வசதிக்காக அவ்வப்போது இபிஎஃப்ஓ புதிய விதிகளை அறிமுகம் செய்கிறது. பல பழைய விதிகளில் சில மாற்றங்களையும் செய்கிறது. PF உறுப்பினர்கள் இந்த விதிகள் மற்றும் மாற்றங்கள் குறித்த புதுப்பித்தல்களை வைத்திருப்பது மிக அவசியமாகும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link