மதுபாட்டிலுக்கு கூடுதல் விலை! தமிழக அரசு மீது மதுபிரியர்கள் குற்றச்சாட்டு!
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலையில், ரூபாய் 10 முதல் 50 வரை விலையை உயர்த்தி உள்ளனர். கடந்த வாரம் விலை ஏற்றி உத்தரவு வெளியிட்டிருந்த நிலையில் விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது.
இதில் குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் சாலையில் உள்ள அரசு மதுபான கடையில், மதுபிரியர்கள் பழைய விலைக்கு பணத்தை கொடுத்து மது பாட்டில் கேட்டுள்ளனர், அப்போது பாட்டிலுக்கு 10 ரூபாய் விலை ஏற்றம் குறித்து விற்பனையாளர் கூறவே, இது எங்களுக்கு தெரியாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கடை விற்பனையாளர் நீங்கள் தினந்தோறும் செய்தித்தாளை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் விலையேற்றம் உங்களுக்கு தெரியவில்லை என்றால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது எனவும் கூறியதால் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் கடையில் மது வாங்க வந்த ஒருவர் மதுபானங்களை மட்டும் விலையேற்றம் செய்யும் இந்த அரசு, ஊழியர்களின் சம்பளத்தை ஏன் ஏற்றுவதில்லை என்றும், கரண்ட் பில், பஸ் டிக்கெட் உள்ளிட்ட கட்டணத்தை ஏற்றிவிட்டு பொதுமக்களை வஞ்சிக்கிறது இந்த அரசு என்றும் சராமாரியாக கேள்வியை அடுக்கடுக்காக முன் வைத்தார்.
மேலும் மதுப்பிரியர் ஒருவர் மதுப்பாட்டில் ஸ்டிக்கர் 130 மட்டுமே ஒட்டியுள்ளது, ஆனால் 150 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். மேலும் பத்து ரூபாய் மட்டுமே விலை ஏற்றம் என்று கூறுகிறார்கள், ஆனால் 5 ரூபாய் 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதை நிறுத்துவது கிடையாது எனவும் கூறி வருகின்றனர்.