Friendship Marriage: கல்யாணத்துக்கு ரெடி ஆனா வேற எதுக்கும் தயார் இல்லை! உருமாறும் திருமணம்...
Friendship Marriage என்ற வாழ்க்கை முறை ஜப்பானில் வேகமாக ட்ரெண்டாகி வருகிறது. காதலும், திருமண உறவுகளும் நாளுக்கு நாள் அதிக சிக்கல்களை சந்தித்து வருவது ஒருபுறக் என்றால், தற்போது திருமண வாழ்க்கை என்பதன் அடிப்படையை ஆட்டம் காண செய்த லிவிங் டு கேதர், ஸ்லீப்பிங் டிவோர்ஸ் என்ற வரிசையில் தற்போது நட்புத் திருமணம் என்ற விஷயம் பரவலாகிவருகிறது
திருமணம் என்பது என்ன?
ஆண் பெண் இருவரும் இணைந்து வாழ்க்கையின் சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டு, நன்மையிலும் தீமையிலும் ஒன்றாக இருப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்வது, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை சரியாக வளர்த்து வாழ்க்கையில் முன்னேறச் செய்வது என பொதுவாக சொல்லலாம்.
ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பிருந்த ‘திருமணம்’ என்ற வார்த்தையின் அர்த்தம், இன்னும் அப்படியே இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. அதேபோல, திருமணம் செய்யும் முறையில் சடங்குகளில் மட்டுமல்ல, வாழ்க்கை சூழல் மாறுவது எண்ணங்களின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது
இதன் அடுத்தகட்டமாக, ஜப்பானில் புதிய விஷயமாக ஃப்ரெண்ட்ஷிப் மேரேஜ் பரவி வருகிறது, பல இளைஞர்கள் தங்களை, நட்புத் திருமணம் என்ற பந்தத்தில் இணைத்துக் கொள்கிறார்கள்.
நட்புத் திருமணம் என்பது ஒரு புதிய வகை உறவாகும். இந்த உறவில் இரண்டு பேர் சட்டப்பூர்வமாக திருமணம் செய்துகொண்டு ஒன்றாக குழந்தைகளைப் பெறலாம், ஆனால் அவர்கள் ஒருவருக்கொருவர் உடலுறவும் கொள்ள வேண்டாம் அல்லது கணவன்-மனைவியாகவோ நெருக்கமாகவும் இருக்க வேண்டாமென மனப்பூர்வமாக முடிவு செய்வார்கள். எனவே அவர்கள் பொதுவாக குழந்தைகளை ஒன்றாகப் பெற்றுக்கொள்ள, மருத்துவ வழிகளைத் தேர்வு செய்கிறார்கள்.
ஜப்பானில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நட்பு திருமணங்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தரவுகளின் படி, 2015 ஆம் ஆண்டு முதல் ஜப்பானில் சுமார் 500 பேர் நட்புத் திருமணங்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பல தம்பதிகள் பொதுவாக இதில் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு தங்கள் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விவாதித்து ஒப்பந்தம் செய்துகொள்கின்றனர்
காதல் அம்சங்கள் இல்லாமல் வாழ ஒரு இணக்கமான ரூம்மேட் மட்டுமே வேண்டும் என்பவர்கள் இந்த தெரிவை தேர்ந்தெடுக்கின்ரானர். ஆனால் சராசரி வருமானத்தைவிட அதிகமாக வருமானம் ஈட்டுபவர்களே இந்த திருமணத்தில் இணைகின்றனர் என்பதும், அவர்கள் பொதுவாக உடலுறவை வெறுப்பவர்களாகவோ அல்லது ஓரினச் சேர்க்கையாளர்களாகவோ இருப்பார்கள் என்பதையும் ஜப்பான் தரவுகள் வெளிப்படுத்துகின்றன. அவர்கள், பாரம்பரிய திருமணத்தை விட நீண்ட கால நட்புக்கு முக்கியம் கொடுப்பவர்களாக இருக்கிறார்கள்.