பொங்கல் சிறப்பு பேருந்து : தமிழ்நாடு அரசு வெளியிட்ட முழு விவரம் - புகார் எண் அறிவிப்பு

Wed, 08 Jan 2025-9:29 am,

பொங்கல் பண்டிகையையொட்டி 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து போக்குவரத்து துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், 2025-ஆம் ஆண்டு வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு. போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் பொங்கல் சிறப்பு பேருந்துகள் (Pongal special bus) இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம்மானது, போக்குவரத்துத் துறை அமைச்சர் சி.சிவசங்கர் அவர்களின் தலைமையில், 6 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறையை சார்ந்த அரசு கூடுதல் செயலாளர். போக்குவரத்துத் துறை ஆணையர், காவல்துறை உயர் அலுவலர்கள், அரசுத் துறை அலுவலர்கள், தனி அலுவலர், போக்குவரத்துத் துறை மற்றும் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் கலந்து கொண்டனர். போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசினார்.

அதில், பொங்கல் திருநாளை முன்னிட்டு வரும் 10/01/2025 முதல் 13/01/2025 வரையில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2092 பேருந்துகளுடன், 5,736 சிறப்புப் பேருந்துகள் என நான்கு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 14,104 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட நாட்களுக்கு 7,800 சிறப்பு பேருந்துகள் ஆக மொத்தம் 21,904 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொங்கல் திருநாள் முடிந்த பின்னர். பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிளுக்காக 15/01/2025 முதல் 19/01/2025 வரையில், தினசரி இயக்கக் கூடிய 10,480 பேருந்துகளுடன் 5,290 சிறப்புப் பேருந்துகளும் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,926 என ஆக மொத்தம் 22,676 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, நெல்லை, சேலம், கோவை, கும்பகோணம் மற்றும் தஞ்சை வழியாக செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் (புறநகர்) இருந்தும், வந்தவாசி போளூர் மற்றும் திருவண்ணாமலை வழியாக செல்லும் பஸ்கள் கிளாம்பாக்கம் மாநகர பஸ் நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும்.

கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சீபுரம், வேலூர், பெங்களூரு மற்றும் திருத்தணி வழியாக செல்லும் பஸ்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும், பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா வழியாக செல்லும் பஸ்கள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பஸ்கள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும் என்று கூறினார். 

கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து (OMR) திருப்போரூர் - செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சிறப்பு பேருந்து முன்பதிவு 10 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த முன்பதிவு காலை 7.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை செய்ய முடியும்.

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கம், கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவு செய்யலாம். ஆன்லைன் வழியாக tnstc official app மற்றும் www.tnstc.in போன்ற இணைய தளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக 94450 14436 என்ற தொலைபேசி எண்ணை (24×7) மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 8151 (Toll Free Number) மற்றும் 044- 24749002, 044-26280445, 044-26281611 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

இதுமட்டுமின்றி. பயணிகளின் நலன் கருதி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை (Control Room) 24 மணி நேரமும் செயல்படும்.

 

மேலும், பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக பல்வேறு இடங்களில் தகவல் மையங்கள் (May I Help You) அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க முன்பதிவு வசதியினை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து மேற்கூறிய இரண்டு பேருந்து நிலையங்களுக்கும் செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link