கவுதம் கம்பீர் மனம் திறந்து பாராட்டிய வீரர் டி20 உலக கோப்பையில் விளையாடுவாரா?

Fri, 17 May 2024-5:15 pm,

அனல் பறக்க நடந்து வரும் 17-வது ஐ.பி.எல். தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 2-வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது. அந்த அணியின் இந்த வெற்றிக்கு சஞ்சு சாம்சன் முக்கிய காரணமாக திகழ்கிறார். நடப்பு சீசனில் 500-க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்துள்ள அவர் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

அதன் காரணமாக அடுத்த மாதம் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்காக விளையாட சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக கேரளாவைச் சேர்ந்த அவர் கடந்த 2015-ம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமாகி நிலையான வாய்ப்பு கிடைக்காமல் திணறினார். அதே சமயம் கிடைத்த ஓரிரு வாய்ப்புகளிலும் சஞ்சு சாம்சன் அரை சதம் கூட அடிக்காமல் சுமாராக செயல்பட்டார் என்று சொல்லலாம்.

இந்நிலையில் போராடி பெற்றுள்ள இந்த வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்டால் மொத்த உலகமும் உங்களை திரும்பிப் பார்த்து பாராட்டும் என்று சஞ்சு சாம்சனுக்கு கவுதம் கம்பீர் அறிவுரை வழங்கியுள்ளார். இது பற்றி அவர் பேசும்போது, "தற்போது நீங்கள் உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள். உங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்போது நீங்கள் இந்தியாவுக்காக போட்டிகளில் வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஏற்கனவே நீங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவத்தை கொண்டுள்ளீர்கள்.

எனவே அங்கே நேரம் வரும் வரை காத்திருக்க நீங்கள் ஒன்றும் புதியவர் கிடையாது. ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டின் தன்மையை பார்த்த நீங்கள் ஐ.பி.எல். தொடரில் நன்றாக செயல்பட்டுள்ளீர்கள். அதனால் உலகக்கோப்பையில் விளையாட உள்ள சஞ்சு சாம்சன் தம்மால் என்ன முடியும் என்பதை இந்த உலகிற்கு காட்ட வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டில் அதுவும் உலகக்கோப்பை போன்ற தொடரில் நீங்கள் மலரும் போது மொத்த உலகமும் உங்களை திரும்பி பார்க்கும்.

அவர் எப்படிப்பட்ட வீரர் என்பதை சொல்ல எனக்கு 5 நிமிடங்கள் போதாது. இருப்பினும் நீங்கள் மனதளவிலும் திறன் அளவிலும் வளர வேண்டும். இல்லையேல் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாது. இப்போது கேப்டனாக இருப்பதால் உங்களால் சூழ்நிலையை சிறப்பாக மதிப்பிட்டு படிக்க முடியும். அதே காரணத்தால் நீங்கள் சிறந்த பேட்ஸ்மேனாகவும் வருவீர்கள். எனவே டி20 உலகக்கோப்பையில் வாய்ப்பு கிடைத்தால் சஞ்சு சாம்சனின் கேப்டன்ஷிப் அனுபவம் அவருடைய பேட்டிங்கில் வெளிப்படும் என்று நம்புகிறேன்" என கூறினார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link