டாஸ்மாக் அன்பர்களுக்கு நற்செய்தி - மது வாங்கினால் உடனே பில்... எப்போது முதல் தெரியுமா?
டாஸ்மாக் (Tasmac) மாவட்ட மேலாளர் தலைமையில் நாளையும் (நவ.9), நாளை மறுதினமும் (நவ.10) மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் அனைத்து கடைப்பணியாளர்களுக்கு தாலுக்கா வாரியாக பயிற்சி நடத்தப்படுகிறது.
டாஸ்மாக் கடைகளில் வாங்கும் மதுபானங்களுக்கு பில் கிடைப்பது விரைவில் சென்னை புறநகர் (Chennai Outskirts) பகுதிகளில் நடைமுறைக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளது, இதுகுறித்த அப்டேட்டையும் டாஸ்மாக் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் மதுக்கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விற்பனை விலையை (MRP) விட கூடுதலாக பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவது இன்னும் சில கடைகளில் தொடர்வதாக மதுவாங்குபவர்கள் புகார் கூறி வருகின்றனர்.
இம்மாதிரி புகார்களை முழுமையாக நிவர்த்தி செய்வது மட்டுமின்றி கடைகளில் எவ்வளவு சரக்கு விற்பனையாகி உள்ளது, இருப்பு எவ்வளவு உள்ளது என்பதை கண்டறியவும் டாஸ்மாக் கடைகளை கணினி மூலம் ஒருங்கிணைக்க தனி 'சாப்ட்வேர்' உருவாக்கி டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் அரக்கோணம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 14 டாஸ்மாக் கடைகளில் பரீட்சார்த்த அடிப்படையில் கையடக்க கருவி மூலம் 'பில்' வழங்கி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
அப்போது பல குறைபாடுகள் கண்டறியப்பட்டது. அதை தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் கண்டறிந்து மென்பொருளில் சரி செய்தனர். இதைத் தொடர்ந்து அரக்கோணம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 110 டாஸ்மாக் கடைகளுக்கு கையடக்க கருவி மூலம் பில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்னும் 2 வாரங்களில் சென்னை புறநகர் பகுதிகளில் மதுபானங்களை வாங்குபவர்களுக்கு பில் கொடுக்கும் முறையை செயல்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
டிசம்பர் மாதத்திற்குள் 4 ஆயிரத்து 829 கடைகளிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட ஒருங்கிணைப்பு கொண்டு வரப்பட்டு பில் வழங்கப்படுவதுடன் பார்கோடு ஸ்கேனர் வசதியும் கடைகளில் செயல்படுத்த உள்ளனர்.