காத்திருக்கும் பரிசு! நாளை முதல் பொங்கல் தொகுப்பு.. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

Wed, 08 Jan 2025-12:13 pm,

சென்னை சைதாப்பேட்டை 169-வது வார்டில் நாளை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 

பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.  இதற்காக தமிழக அரசு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை இடம் பெற்றுள்ளது. நாளை முதல் வரும் ஜனவரி 13 ஆம் தேதி வரை பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மட்டுமல்லாமல், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு வழங்கப்படுகிறது.

2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகம் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கியது இதுவரை 95 சதவீதம் பேருக்கு டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

கடந்த சில வருடமாக, அதாவது கொரோனா தொற்றுக்குப் பிறகு, பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை அடுத்து பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் வழங்கப்பட்டு வந்தது.

இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கம் அறிவிக்கப்படவில்லை. இதை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதாவது பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கமும் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

இதனையடுத்து ஆளும் திமுக அரசு, மாநிலத்திற்கு தேவையான நிதி மத்திய அரசு சரியாக வழங்க வில்லை என்றும், ஏற்கனவே கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. எனவே போதிய நிதி இல்லாததால், பொங்கல் பரிசு தொகுப்பு உடன் ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் வழங்க வாய்ப்பில்லை எனக் கூறியுள்ளதாகத் தகவல்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை வருவதால், சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு மக்கள் செல்ல ஜனவரி 10 முதல் ஜனவரி 13 வரையில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2092 பேருந்துகளுடன், 5,736 சிறப்புப் பேருந்துகள் என நான்கு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 14,104 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட நாட்களுக்கு 7,800 சிறப்பு பேருந்துகள் ஆக மொத்தம் 21,904 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதேபோல பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் முடிந்து சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வரும் பயணிளுக்காக ஜனவரி 15 முதல் ஜனவரி 19 வரையில், தினசரி இயக்கக் கூடிய 10,480 பேருந்துகளுடன் 5,290 சிறப்புப் பேருந்துகளும் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,926 என ஆக மொத்தம் 22,676 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link