சுகர் லெவலை சுலபமா குறைக்கும் ஆரோக்கியமான உணவுகள்: கண்டிப்பா ட்ரை பண்ணுங்க
வெந்தயம்: வெந்தயம், வெந்தய பொடி, வெந்தய நீர் என இவை அனைத்தும், இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகின்றன. இரவில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் அந்த நீரை குடித்து வந்தால் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்கலாம். இது எடை இழப்பிலும் உதவுகின்றது.
சுகர் லெவல் அதிகமாக உள்ளவர்கள் முழு தானியங்களை உட்கொள்ளலாம். முழு தானியங்களை அதிக அளவில் உட்கொள்வது நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைப்பதாக பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இவை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளையும் அளிக்கின்றன.
பாகற்காய்: பாகற்காய் உடலில் இரத்த சர்க்கரையை குறைக்க பெரிய அளவில் நன்மை பயக்கும். பாகற்காயில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. காய்களில் பாகற்காய் சுகர் நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த காயாக உள்ளது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு குடிக்கலாம்.
தயிர்: தினமும் 80-125 கிராம் தயிர் சாப்பிட்டால், டைப் 2 நீரிழிவு நோயின் அபாயம் குறைவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி தயிர் இதய நோய் அபாயத்தையும் 14 சதவீதம் குறைக்கிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக கருதப்படுகின்றது.
வேம்பு: வேம்பு, குளுக்கோஸ் டிரான்ஸ்போர்ட்டர் 4 (GLUT4) மற்றும் குளுக்கோசிடேஸ் போன்ற முக்கிய குடல் நொதிகளைத் தடுத்து அதன் மூலம் அதிக குளுக்கோஸ் உரிஞ்சப்படுவதை சீர் செய்கிறது. வேம்பு சுகர் நோயாளிகளுக்கு சிறந்ததாக கருதப்படுகின்றது. நீரிழிவு நோயாளிகள் வேப்பிலையை அப்படியே கடித்தும் சாப்பிடலாம். வேப்பம்பூ, வேப்பிலை, வேம்பு பொடி ஆகியவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து சாறு குடிக்கலாம்.
பச்சை மிளகாய்: கார சுவை கொண்ட மிளகாயில் பல வித ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. இதில் காரத்திற்கு காரணமான கேப்சைசின் என்ற வேதிப்பொருள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் சர்க்கரை நோயின் அபாயம் பெருமளவு குறையும்.
கொண்டைக்கடலை: அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து உள்ள கொண்டைக்கடலை, சுகர் நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு சூப்பட்ஃபுட் என நிபுணர்கள் கூறுகிறார்கள். கொண்டைக்கடலையை தொடர்ந்து உட்கொள்வதால் நீரிழிவு நோயின் அபாயத்தையும் குறைக்கலாம் என ஆயுவுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் நீண்ட நேரம் வயிற்றுக்கு நிரம்பிய உணர்வு கிடைக்கின்றது.
திராட்சை: பல ஆரோக்கிய நன்மைகள் கொண்ட பழங்களில் திராட்சையும் ஒன்று. இதனை தினமும் உட்கொள்வதால் டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கலாம் என கூறப்படுகின்றது. இது பல ஆய்வுகளின் மூலமும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இவற்றுடன் நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக மருத்துவர் கொடுக்கும் மருந்துகளை உட்கொண்டு அவர் சொல்லும் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். மேலும், அவ்வப்போது இரத்த சர்க்கரை அளவை பரிசோதனை செய்வதும் மிக அவசியம்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.